பவானி அருகே 640 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது
ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஆம்னி வேனில் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 640 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.
பவானி அருகே ஆம்னி வேனில் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 640 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு மாவட்டம் பவானி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பவானி - வெள்ளித்திருப்பூர் சாலையில் உள்ள ஏரிக்கரை பகுதியில் ரேஷன் அரிசியை விற்பனை செய்வதற்காக கடத்தி செல்வதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலின் பேரில், உதவி காவல் ஆய்வாளர் மூர்த்தி தலைமையிலான போலீசார் சனிக்கிழமை (நேற்று) ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக சந்தேகப்படும் படியாக வந்த ஆம்னி வேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 16 மூட்டைகளில் 640 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து வேனில் இருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் பவானி திருவள்ளுவர் நகரை சேர்ந்த சக்திவேல் (வயது 27) என்பதும், பொது மக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து, சக்திவேலை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். மேலும் , அவரிடம் இருந்து 640 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.