ஈரோட்டில் 1,000 பேருக்கு மஞ்சப் பைகள் வழங்கி விழிப்புணர்வு

சர்வதேச நெகிழிப் பைகள் இல்லாத தினத்தினை முன்னிட்டு, ஈரோட்டில் மீண்டும் மஞ்சப்பை டோரா விழிப்புணர்வு பொம்மையினை திறந்து வைத்து 1,000 பேருக்கு மஞ்சப் பைகளை கூடுதல் ஆட்சியர் மனிஷ் (வளர்ச்சி) வழங்கினார்.

Update: 2024-07-04 00:00 GMT

பொதுமக்கள் மற்றும் மாணவ,மாணவியருக்கு மஞ்சப் பைகளை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மனிஷ் வழங்கிய போது எடுத்த படம்.

ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா நூலகம் அருகில் சர்வதேச நெகிழிப் பைகள் இல்லாத தினத்தினை முன்னிட்டு, மீண்டும் மஞ்சப்பை டோரா விழிப்புணர்வு பொம்மையினை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மஞ்சப் பைகளை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மனிஷ் வழங்கினார்.

தமிழ்நாடு அரசால், ஏற்கனவே ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நெகிழி பயன்பாட்டினை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் முக்கியமானது மீண்டும் மஞ்சப்பை. இத்திட்டத்தின் கீழ், பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து மஞ்சப்பை போன்ற துணிப் பைகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


அதன்படி, சர்வதேச நெகிழிப் பைகள் இல்லாத தினத்தினை முன்னிட்டு,  நேற்று (3ம் தேதி) ஈரோடு மாவட்ட நிர்வாகம், ஈரோடு மாநகராட்சி, ஈரோடு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், பள்ளிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம். இலஞ்சி சமூக அமைப்புடன் ஒருங்கிணைந்து மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மனிஷ் பங்கேற்று எல்இடி மஞ்சப்பை பின்னணியுடன் கூடிய டோரா மாஸ்காட் மற்றும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சியின் பொன்மொழிகளை விளக்கும் எல்இடி ஸ்க்ரோலிங் பதாகையை திறந்து வைத்து 1,000 பொதுமக்கள், சாலையோர சில்லறை வியாபாரிகள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கும் துணிப்பைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் மற்றும் பங்கேற்பாளர்களால் துணி பைகள் மற்றும் நெகிழிப் பைகள் தவிர்ப்பு பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மோகன் (தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்), ஈரோடு மாநகராட்சி முதன்மை பொறியாளர் விஜயகுமார். உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வகணபதி. சுற்றுச்சூழல் பொறியாளர் (பறக்கும் படை) குணசீலன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் (பறக்கும் படை) ராஜ்குமார், உதவி பொறியாளர் சிவகீர்த்தி, இலஞ்சி சமூகநல இயக்க நிறுவனர் ஜானகி உட்ப பள்ளி மாணவர்கள், சாலையோர சில்லறை வியாபாரிகள், கடை உரிமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News