வயதான தம்பதியர் கழுத்தறுத்து படுகொலை: சேலம் சரக டி.ஐ.ஜி, எஸ்.பி.நேரில் விசாரணை
பொம்மிடி அருகே வயதான தம்பதியர் கழுத்தறுத்து படுகொலை-படுகொலை குறித்து சேலம் சரக டி.ஐ.ஜி, எஸ்.பி.நேரில் விசாரணை.;
தருமபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த பில்பருத்தி- ஏரிக்கரையோரம் விவசாய நிலத்தில் கிருஷ்ணன்(80)-சுலோக்ஷனா(75) ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை தம்பதி தனியாக வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு பாரதி, உஷா என இரண்டு மகள்கள், மணி என்ற மகன் உள்ளனர். மணி சேலத்தில் தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் வயதான தம்பதி தங்களுக்கு சொந்தமான ஏழரை ஏக்கர் விவசாய நிலத்தில், விவசாயம் செய்து வருகின்றனர். தொடர்ந்து விவசாய நிலத்தில், மஞ்சள் தோட்டத்தில் களை பறிக்க கூலியாட்களை வைத்து பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை வேலை செய்வதற்காக கூலியாட்கள் வந்துள்ளனர்.அப்போது வீட்டின் அருகே உள்ள வாழைமரம் அருகே கிருஷ்ணன் அவரது மனைவி சுலோக்ஷனா, இரத்த வெள்ளத்தில் கழுத்தறுத்தும், தலையில் படுகாயத்துடன் மர்மமான முறையில் கொலை செய்ய பட்டு கிடந்தனர். இதனை கண்ட பெண்கள் பார்த்து பொம்மிடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து பொம்மிடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சேலம் சரக டி.ஐ.ஜி, மகேஸ்வரி, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் நேரில் சென்று பார்வையிட்டு, வேலைக்கு வந்திருந்த கூலியாட்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் பைரவா வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து விசாரணையை தீவிர படுத்தி வருகின்றனர். காவல் துறையினர் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மர்மமான முறையில் தனியாக இருந்த வயதான தம்பதியர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பொம்மிடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.