பொம்மிடி அருகே 10 மலைவாழ் மக்கள் கிராமத்திற்கு முதன்முறையாக பேருந்துகள் இயக்கம்

பொம்மிடி அருகே 10-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் கடந்த 75 ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாமல் அவதிபட்டு வந்தனர்.

Update: 2023-10-30 11:43 GMT

புதிய பேருந்து வழித்தடத்திற்கு ஆரத்தி எடுக்கும் மலைக்கிராம மக்கள் 

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே போதக்காடு, மாரியம்மன் கோவிலூர், கரியதாதனூர், முல்லைநகர் என 10-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் விவசாய பெருங்குடி மக்களும், மலை வாழ் மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் தங்கள் உற்பத்தி செய்யும் விவசாய பொருட்களையும், மருத்துவமனை, அரசின் உதவிகளுக்கும், பள்ளி, கல்லூரி சென்று வருவ தற்கும் சுதந்திரம் அடைந்து கடந்த 75 ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாமல் அவதிபட்டு வந்தனர்.பேருந்துகள் இயக்க வேண்டும் என்று அரசிற்கு நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியை சார்ந்த மலைவாழ் மக்கள் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சரவணனிடம் பேருந்து வசதி வேண்டும், ஏற்காடு மலை கிராமங்களை இணைப்பதற்கு தார் சாலை வசதி வேண்டும் என்று கோரிக்கையை வைத்தனர்.

அவர்களது நியாயமான கோரிக்கையை தர்மபுரி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரிடமும், மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

இதையடுத்து மலை கிராமங்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்ட தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கிராம மக்களின் தேவைகளை குறித்து அறிக்கையாக அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

இதையடுத்து முதற்கட்டமாக குறிப்பிட்ட அளவு மலை கிராமங்களை ஏற்காடு மலையோடு இணைக்கும் புதிய தார்சாலை அமைக்க உத்தரவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து தற்போது இந்த மலை கிராமங்களுக்கு புதிய பேருந்து இயக்குவதற்கு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது,

அதன்படி இந்த மலைவாழ் மக்கள் வாழும் கிராம மக்கள் நகரப் பகுதிக்கு வந்து செல்வதற்காக முதல் பேருந்து இயக்கம் போதகாடு பகுதியில் இருந்து பையர் நத்தம், பொம்மிடி, கடத்தூர் வழியாக தர்மபுரி வரை செல்லும் என அறிவிக்கப்பட்டது.

இன்று காலை பேருந்தின் முதல் ஓட்டத்தை பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.சரவணன் தலைமையில் மலைவாழ் மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். பேருந்திற்கு ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும், மேளதாளத்துடன் கிராம மக்கள் வரவேற்றனர்.

மலை கிராமங்களுக்கு பேருந்து இயக்கப்படுவது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: எங்கள் கிராமப் பகுதிக்கு நீண்டகால கோரிக்கையாக இருந்த பேருந்து வசதி கிடைத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி.

இதன் மூலமாக எங்களது குழந்தைகள் பாதுகாப்பான முறையில் பள்ளி கல்லூரிக்கு சென்று வருவர். நாங்களும் மிக எளிய முறையில் குறைந்த கட்டணத்தில் நகரப் பகுதிக்கு சென்று வருவோம்.

இதற்கு முழு முயற்சி எடுத்த ஓன்றிய செயலாளர் சரவணன், மாவட்ட செயலாளர் பழனியப்பன், மாவட்ட பொறுப்பு அமைச்சர் பன்னீர்செல்வம் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி என தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

Tags:    

Similar News