பொம்மிடி அருகே பாமகவினர் மீது தாக்குதல்: கைது செய்யக்கோரி மறியல்
பா.ம.க.வினர் மீது தாக்குதல் தாக்கியவர்களை கைது செய்ய கோரி, பொம்மிடி அருகே சாலை மறியல் நடைபெற்றது.;
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த புது ஒட்டுபட்டிபகுதியை சேர்ந்தவர் பொன்னியப்பன்; இவரது மனைவி கவிதா, குமரன் மனைவி புவனேஸ்வரி இவர்கள் இருவரும், நேற்று மாலை 6:00 மணியளவில் புது ஒட்டுபட்டியில் இருந்து பண்டாரசெட்டிப்பட்டிக்கு செல்லும் கொடிவழிபாதையில் வாக்கிங் சென்றனர். அப்போது பண்டாரசெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சிலர் மது அருந்தியுள்ளனர்.
அவர்களிடம், புவனேஸ்வரி, கவிதா ஆகியோர், இங்கு குடிக்க வேண்டாம் என கூறவே, இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த பெண்கள் தங்கள் கணவர்களிடம் இது குறித்து செல்போனில் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பொன்னியப்பன், குமரன் ஆகிய இருவரும், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மது அருந்தி கொண்டு இருந்தவர்களிடம் சென்று பெண்களை தவறாக பேசியது குறித்து கேட்டுள்ளனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் பொன்னியப்பன், குமரன் இருவரையும் தாக்கி உள்ளனர். இதனையடுத்து நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என கூறி புது ஓட்டுப்பெட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பாமகவினர், பொம்மிடி ரயில் நிலையம் முன்பு, சேலம் தர்மபுரி செல்லும் சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த அரூர் போலீஸ் டிஎஸ்பி பெனாசிர் பாத்திமா சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.
இதில் சமரசம் ஏற்படாததால் தொடர்ந்து பா.ம.கவினர், மறியலை தொடர்ந்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவவே, நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பொன்னியப்பன் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் உள்ள, வார்டு,7ல் பா.ம.க., வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாமலை சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இதையடுத்து, இரவு 10:15 மணியளவில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.