பாப்பிரெட்டிப்பட்டி: நில அளவை அதிகாரிகள் அலைக்கழிப்பதாக மக்கள் புகார்
பாப்பிரெட்டிப்பட்டி தாலூகாவில் நில அளவை அதிகாரிகள் பொதுமக்களை அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.;
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் 45 வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்துக்கு உட்பட்ட விவசாயிகள், பொதுமக்கள், தங்களது வீட்டின் இடம், விவசாய நிலங்கள் தொடர்பான பிரச்சினைகள் இருப்பின், அதனை அளவிட வேண்டி பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தை அணுக வேண்டும். அங்கு உரிய தொகை கட்டிவிட்டால் அதிகாரிகள் மற்றும் நில அளவை செய்யும் சர்வேயர்கள் மூலம், அதனை அளந்து பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும்.
அதன்படி, நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணம் கட்டுகின்றனர். இதில் அதிகாரிகளை கவனிப்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனால், தாலுகா அலுவலகத்தில் பணம் கட்டி கடந்த ஓராண்டுக்கு மேலாகியும், அதிகாரிகளுக்கு பணம் கொடுக்காததால், நில அளவீடு பணி நடக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
கடத்தூர் அருகே உள்ள ராணி மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த இருளர் இன மக்கள், தங்களது விவசாய நிலத்தை அளந்து காட்ட வேண்டும் என்று இதுவரை இரண்டு முறை பணம் கட்டியும், அதிகாரிகள் அளவீடு செய்யாமல் அலைக்கழிப்பதாக பொதுமக்கள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர். இதேபோன்று பல கிராமங்களில் நிலங்கள் அளக்கபடாமல் பொதுமக்களை நில அளவை அதிகாரிகள் வருவாய் துறை அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாகவும், இப்பிரச்சனைக்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.