காரிமங்கலத்தில் அதிகாரிகளிடம் தகராறு செய்த வாலிபர் கைது
காரிமங்கலத்தில் அதிகாரிகளிடம் தகராறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த போத்தாபுரத்தைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. இவர் மக்கள் கிராம சபை இயக்கம் என்ற பெயரில் அமைப்பை நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு ஊராட்சிகளில், ஊராட்சி மன்ற தலைவர்கள் செயலாளர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஆகியோரிடம் பல்வேறு புகார்களை எழுப்பி, மோதல் போக்கை கடைபிடித்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், நேற்று விநாயகமூர்த்தி மற்றும் சிலரை அழைத்து வந்து காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியில் இருந்த பிடிஓ (திட்டம் ) கிருஷ்ணன் என்பவரிடம், கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு அவர், கிராமசபை கூட்டம் நடத்துவது தொடர்பாக அரசு அறிவிப்பு மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு கிடைத்தால் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், உங்களது கோரிக்கை மனுவை அரசுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார். அதை ஏற்க மறுத்து விநாயகமூர்த்தி மற்றும் சிலர், பிடிஓ கிருஷ்ணன் மற்றும் அங்கிருந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். மேலும் பிடிஓ கிருஷ்ணன் வாகனத்தின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த காரிமங்கலம் எஸ்ஐ விஜய்சங்கர் மற்றும் போலீசார், பிடிஓ அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளுடன் தகராறு செய்த விநாயகமூர்த்தி மற்றும் சிலரை அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக பிடிஓ கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார், விநாயக மூர்த்தியை கைது செய்தனர்.