அரூரில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் நகை பணம் கொள்ளை
அரூரில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.
தருமபுரி மாவட்டம் அரூர் கோவிந்தசாமி நகரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மணி. இவர் அரூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சனிக்கிழமை வேலூரில் உள்ள தங்களது குல தெய்வம் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று உள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 11 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் வெளி கதவு திறக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை தொடர்ந்து வீட்டில் நுழைந்து பார்த் போது வீட்டின் பிரதான கதவு உடைக்கப்பட்டும் உள்ளிருந்த பீரோ, கப்போர்டுகள் உள்ளிட்ட அனைத்து இடங்களும் உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த துணி உள்ளிட்ட பொருட்கள் எல்லாம் கீழே சிதறி கிடந்துள்ளது. இதனை கண்டு மணி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தொடர்ந்து வீட்டில் வைத்திருந்த பொருட்களை சோதனை செய்து பார்த்ததில், 3 சவரன் தங்க சங்கிலி உள்ளிட்ட சிறு சிறு தங்க நகைகள் என சுமார் 6 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அதேபோல் வீட்டில் வைத்திருந்த சுமார் 1.25 லட்சம் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மணி அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வீட்டினுள் நுழைந்து சோதனை செய்தனர்.
மேலும் அருகில் உள்ள வீடுகளில் காவல துறையினர் விசாரணை நடத்தி, தெருக்களில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில், இரவு நேரங்களில் நடமாடியவர்களின் காட்சி ஏதேனும் பதிவாகி உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து கைரேகை நிபுணர்களை வர வழைத்து வீட்டில் பொருட்கள் சிதறிக் கிடந்த பகுதிகளில் தடயங்களை காவல் துறையினர் சேகரித்தனர். அரூர் பகுதியில் நேற்று கோயிலில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற நிலையில், தொடர்ந்து இன்றும் அருர் நகர பகுதியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.