அரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை அமைக்க கோரிக்கை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-08-07 16:30 GMT

பைல் படம்.

இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி தாலூகா அ. பள்ளிப்பட்டி கிராம மக்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: அரூர்-சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெறுகின்றன. முதல் கட்டமாக திருப்பத்தூரில் இருந்து ஏ.பள்ளிப்பட்டி வரையிலும் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது.

இந்த நான்கு வழி சாலை அமைக்கப்படும் இடங்களில் சாலையோரங்களில் மழைநீர் மற்றும் கழிவு நீர் செல்வதற்கான கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கால்வாய்கள் தார் சாலையின் உயரத்தை விட கூடுதல் உயரமாக உள்ளது. இதனால் கிராம பகுதியில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் இணையும் இடங்களில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. கிராமப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நெடுஞ்சாலை ஓரத்தில் மண் கொட்டி சாலையை உயரமாக மாற்றி வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

நெடுஞ்சாலை ஓரத்தில் மண்மேடு செய்யப்பட்டுள்ள இடங்களில் மழைக்காலங்களில் விபத்துக்கள் நேரிடும் அபாயம் உள்ளது. அதேபோல் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சர்வீஸ் சாலைகள் இருந்தால் கிராம பகுதிகளுக்கு வாகனங்கள் எளிதில் சென்று வர முடியும். ஆகவே சேலம்- திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சர்வீஸ் சாலைகள் அமைக்க வேண்டும். தரமான முறையில் நான்கு வழிச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News