கல்லூரி மாணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்
சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என துணை காவல் கண்காணிப்பாளர் கூறியதையடுத்து போராட்டம் வாபஸ்
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வேடகட்ட மடுவைச் சேர்ந்தவர் குமார் மகன் சுள்ளான், (20) இவர், அரூர் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.ஏ., ஆங்கிலம் மூன்றாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஈட்டியம்பட்டியை சேர்ந்த சபீனா என்பவரை பார்ப்பதற்காக சுள்ளான் இருசக்கர வாகனத்தில் ஈட்டியம்பட்டிக்கு சென்று உள்ளார்.
இந்நிலையில், அரூர்–தீர்த்தமலை சாலையில், வேப்பம்பட்டி ரைஸ்மில் பேருந்து நிறுத்தம் அருகில் சுள்ளான் இறந்த நிலையில் கிடந்தார். இது குறித்து அரூர் காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், சுள்ளான் அடித்து கொலை செய்யப்பட்டதாவும், அவரது கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி, அரூர் கச்சேரிமேட்டில், சுள்ளானின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன், அரூர் துணை காவல் கண்காணிப்பாளர், ஜெகநாதன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது, சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து. மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து உயிரிழந்த சுள்ளானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு சுள்ளானின் உடலை பெற்றோரிடம் ஒப்ப டைத்தனர்.
உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.