நிரம்பி வழியும் வள்ளிமதுரை வரட்டாறு அணை: ஏரிகளை நிரப்ப விவசாயிகள் கோரிக்கை

வள்ளிமதுரை வரட்டாறு அணை நிரம்பி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-13 05:15 GMT

நிரம்பி வழியும் வள்ளிமதுரை வரட்டாறு அணை.

தர்மபுரி மாவட்டம், அரூரை அடுத்த வள்ளிமதுரையில் அமைந்துள்ளது வரட்டாறு அணை. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு உயரம் 34.45 அடியாகும்.

இந்த அணையின் நீளம் 1, 360 மீட்டராகும். கடந்த சில தினங்களாக சித்தேரி மலைத் தொடரில் பெய்த கன மழையின் காரணமாக வள்ளிமதுரை வரட்டாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது அணை நிரம்பியுள்ள நிலையில் அதிக அளவில் உபரி நீர் வெளியேறி வருகிறது.

வள்ளிமதுரை வரட்டாறு அணையானது பிற நீர்த்தேக்கங்களை போல் இல்லாமல் நிரம்பினால் தானாக வழிந்தோடும் வகையில் கட்டப்பட்டுள்ளது. அதாவது தடுப்பணை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால், பருவ மழைக்காலங்களில் கிடைக்கும் மழைநீர் பயன்படுத்தி ஏரிகள், குளம் குட்டைகளை நிரப்பினால் கோடையில் வேளாண்மை பணிகள் சிறப்பாக அமைவதுடன், குடிநீர் பிரச்னைகள் இருக்காது.

வள்ளிமதுரை வரட்டாறு அணையின் இடது மற்றும் வலதுபுற கால்வாய்களில் தண்ணீர் சென்றால் அச்சல்வாடி, குடுமியாம்பட்டி, எல்லப்புடையாம்பட்டி, முத்தானூர், ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 30 க்கும் அதிகமான ஏரிகள், குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்புவதுடன் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியை பெறும்.

எனவே, வரட்டாற்றில் வெளியேறும் உபரி நீரை பயன்படுத்தி வறண்டு கிடக்கும் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை நிரப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.

பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையின் மொத்த நீர்ப்பிடிப்பு உயரம் 65.27 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 64.30 அடியாக உள்ளது. இந்த அணையில் இருந்து வினாடிக்கு சுமார் 100 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை இரவு பெய்த கன மழையின் காரணமாக வாணியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வாணியாறு கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News