மொரப்பூர் அருகே புதிய பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நியமனத்துக்கு எதிர்ப்பு
புதிய பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நியமனம் செய்ததை எதிர்த்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
மொரப்பூர் அருகே புதிய பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரை நியமனம் செய்ததற்கு பொதுமக்களும் மாணவர்களும் எதிர்ப்புத்தெரிவித்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம்,மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம்,தாசர ஹள்ளியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக தொழிலதிபர் டி.சி.சம்பத் என்பவர் நேற்று முன்தினம் மாலை பொறுப்பு ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.திருமால், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய துணை செயலாளர் அம்மாசி,ஊர் பிரமுகர் சேட்டு ஆகியோர் தலைமையில் பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை பள்ளி முன்பு திரண்டனர்.
மேலும் பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வகுப்பிற்கு அனுப்பாமல் பள்ளியை முற்றுகையிட்டனர். இச்சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் அரூர் வருவாய் கோட்டாட்சியர் முத்தையன்,முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு தகவல் தெரிவிதார். மேலும் இச்சம்பவம் குறித்து தகவலறிந்ததும், மொரப்பூர் ஒன்றிய குழு தலைவர் இ. டி.டி.சுமதி செங்கண்ணன், தாசர ஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.தமிழ்ச்செல்வி ரங்கநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்த பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் பெற்றோர்களில் ஒருவரை தான் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக நியமனம் செய்ய வேண்டும்,பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ,மாணவியர்களின் பெற்றோர்களுக்கும் தகவல் கொடுத்து அவர்களை வரவழைத்து அவர்களின் ஒப்புதலின் பேரில் தகுதியான நபரை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை பெற்றோர் தரப்பில் முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட ஒன்றிய குழு தலைவர் சில தினங்களில் பெற்றோர்களின் கூட்டம் நடத்தி அவர்களின் ஒப்புதல் பேரில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என உறுதி அளித்ததின் பேரில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வகுப்பிற்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவத்தால் தாசர ஹள்ளி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.