கே.ஈச்சம்பாடி அணைக்கட்டிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
கே.ஈச்சம்பாடி அணைக்கட்டிலிருந்து அரூர் எம்எல்ஏ., சம்பத்குமார் இன்று பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தருமபுரி மாவட்டம் கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நிரம்பி, தண்ணீர் ஆற்றில் சென்று வருகிறது.
தொடர்ந்து அணைக்கட்டிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அரசை அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு கே.ஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது மற்றும் இடது புற கால்வாய்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து இன்று கே.ஈச்சம்பாடி அணைக்கட்டிலிருந்து விவசாய பாசனத்திற்காக இடது, வலது புறக் கால்வாய்களில் வினாடிக்கு 35 கன அடி வீதம், வினாடிக்கு 70 கன அடி தண்ணீரை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி, எம்.எல்.ஏ., சம்பத்குமார் ஆகியோர் திறந்து வைத்து மலர் தூவினார்.
தொடர்ந்து அணையின் வலது மற்றும் இடது புற கால்வாய்களில், இன்று முதல் 120 நாட்களுக்கு அல்லது ஆற்றில் தண்ணீர் வரத்து இருக்கும் வரை பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சுமார் 6,250 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதனை தொடர்ந்து தடுப்பணையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, மொரப்பூர் ஒன்றிய குழு தலைவர் சுமதி செங்கண்ணன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தனபால், தாசில்தார் சின்னா, செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் பிரபு உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.