அரூர் பேரூராட்சியில் பதவியேற்று போலீஸ் பாதுகாப்புடன் வெளியே வந்த உறுப்பினர்கள்
அரூர் பேரூராட்சியில் பதவியேற்று 4 மணி நேரத்திற்கு பிறகு காவல் துறையினர் பாதுகாப்புடன் உறுப்பினர்கள் வெளியில் வந்தனர்.;
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவு பெற்று, இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.
இந்நிலையில் தருமபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இந்த 18-வார்டு உறுப்பினர்களுக்கும் பேரூராட்சி செயல் அலுவலர் கலைமணி பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து 18 வார்டு உறுப்பினர்களும் காலை 11 மணிக்கு பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
ஆனால் அரூர் பேரூராட்சியில் அதிமுக, திமுக இரண்டும் தலா ஏழு இடங்களை பெற்று சம பலத்துடன் இருந்து வருகின்றனர். மேலும் இரண்டு சுயேட்சைகள் பாமக 2 என இருப்பதால், இதில் பெரும்பான்மையை பெறுவதில் இரண்டு கட்சிகளுக்கும் இடையே போட்டி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஒரு சுயட்சை திமுகவிற்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். மேலும் பேரூராட்சி தலைவர் பதவியை பிடிப்பதற்கு 10 வார்டு உறுப்பினர்கள் தேவைப்படுவதால் திமுகவினருக்கு 2 வார்டு உறுப்பினர்களும், அதிமுகவுக்கு மூன்று உறுப்பினர்களும் தேவைப்படுகிறது. இந்நிலையில் பாமக வை சேர்ந்த இரண்டு உறுப்பினர்களில் ஒருவர் அதிமுகவுக்கு சாதகமாகவும், மற்றொருவர் திமுகவுக்கு சாதகமாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தலைவர் பதவியைப் பிடிப்பதற்காக அதிமுகவினர் மற்றொரு பாமக உறுப்பினரை தங்கள் வசம் எடுப்பதற்கான முயற்சியில் இருந்தனர். ஆனால் பாமகவை சேர்ந்த அன்புமணி, பதவியேற்க திமுகவினருடன் வந்தார். இதனை அடுத்து வெளியில் வரும் பாமகவினரை தங்கள் பக்கம் அழைத்துச் செல்வதற்காக அதிமுக திமுகவினர் இடையே கடும் போட்டி நிலவியது. இதனால் திமுக உறுப்பினர்கள் மற்றும் பாமகவை சேர்ந்த ஒரு உறுப்பினர் வெளியில் வராமல் பேரூராட்சி அலுவலகத்திற்குள்ளேயே இருந்தனர்.
ஆனால் பதவியேற்றவுடன் அதிமுக உறுப்பினர்கள் 7 பேரும் வெளியில் வந்தனர். தொடர்ந்து பாமக உறுப்பினர் அன்புமணிக்காக இரண்டு கட்சிகளும் முண்டியடித்துக் கொண்ட நிலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பேரூராட்சி அலுவலகம் முன்பு காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். இதனிடையே பாமக திமுக, அதிமுக இரண்டு கட்சி தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்படும் சூழல் நிலவியது.
இதனையடுத்து காவல் துறையினர் அதிகமாக குவிக்கப்பட்டு அதிமுக, திமுக கட்சி தொண்டர்களை பேரூராட்சி அலுவலகத்திற்கு குறிப்பிட்ட தூரத்திற்கு அனுப்பினர். ஆனாலும் பரபரப்பு நிலவிக் கொண்டே இருந்ததால் சம்பவ இடத்திற்கு தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் நேரில் வந்தார். இதனையடுத்து இரண்டு பக்கமும் இருந்த அதிமுக, திமுக தொண்டர்களை அப்புறப்படுத்திவிட்டு, பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த திமுக உறுப்பினர்களுடன் மற்றும் பாமகவை சேர்ந்த அன்புமணியின் விருப்பத்திற்கேற்ப, காவல் துறையினர் பாதுகாப்பாக வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து ஒரு கவுன்சிலரை பிடிப்பதற்காக இரண்டு கட்சிகளும் முனைப்பு காட்டியதால், சுமார் 4 மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து 4 மணி நேரத்திற்குப் பிறகு காவல்துறை பாதுகாப்பு காரணம் பாமகவை சார்ந்த உறுப்பினர் அன்புமணி திமுகவினருடன் காரில் அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் அரூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.