சேதமடைந்த வேளாண் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
தொடர் மழையினால் சேதமடைந்த வேளாண் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு உழவர் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது
தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலர் இல.வேலுசாமி கூறியதாவது: தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி உள்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழையினால் வேளாண் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழக அரசு சார்பில் சேதமடைந்த வேளாண் பயிர்களை விரைந்து கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் தமிழக அமைச்சர்கள் ஆய்வு செய்வதை போன்று, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
பருவ மழைக்காலம் என்பதால் மரவள்ளி கிழங்கு கொள்முதல் விலையை வியாபாரிகள் அதிக அளவில் குறைத்துள்ளனர். இதனால், விவசாயிகள் பெரும் துரயத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, தமிழக அரசு சார்பில் மரவள்ளி கிழங்கு, மஞ்சள் உள்ளிட்ட வேளாண் விளை பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
வேளாண் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும். பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கும் மத்திய, மாநில அரசு சார்பில் சேதமடைந்த பயிர்களுக்கு காப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரம், யூரியா உள்ளிட்ட வேளாண் இடுபொருள்களை அரசு சார்பில் இலவசமாக வழங்க வேண்டும் என்று கூறினார்