அரூர் அருகே நாய் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு; வனத்துறையினர் கவலை
அரூர் அருகே காப்பு காட்டில் நாய் கடித்ததில் படுகாயமடைந்த 5 வயது மதிக்கதக்க பெண் புள்ளிமான் உயிரிழந்தது.
தருமபுரி மாவட்டம், அரூர் மொரப்பூர் வனச் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கீழ்மொரப்பூர், மருதிப்பட்டி, கொளகம்பட்டி, எட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட காப்பு காடுகள் உள்ளன. இங்கு மான், மயில், காட்டெருமை, முயல் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.
வன விலங்குகளின் குடிநீர் தேவைக்காக தொடர்ந்து அப்பகுதிகளில் குட்டைகள் அமைக்கப்பட்டு, சோலார் மூலம் தண்ணீர் நிரப்பியும், மழை நீரும் தேக்கி வைக்கப்படுகிறது. ஆனாலும் உணவு மற்றும் குடிநீர் தேவைக்காக வனப் பகுதியில் உள்ள வன விலங்குகள் வனப் பகுதியை விட்டு வெளியே வருகின்றன.
அதேபோல் வனப் பகுதியின் நடுவில் பிரதான சாலை இருப்பதால், வன விலங்குகள் சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு வன சாலையை ஒட்டியுள்ள பகுதியில் வந்த புள்ளிமானை நாய்கள் துரத்தி கடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த 5 வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமான் உயிரிழந்தது. தொடர்ந்து சாலையோரம் இறந்து கிடந்த புள்ளிமானை பார்த்தவர்கள், வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மொரப்பூர் வனச்சரகர் சிவக்குமார் தலைமையிலான வனத்துறையினர், புள்ளிமானை மீட்டு, கால்நடை மருத்துவரால் உடலை பிரேத பரிசோதனை செய்து, வனப் பகுதியிலேயே புள்ளிமானை அடக்கம் செய்தனர்.
தொடர்ந்து வனத்துறையினர் வன விலங்குகளை காப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தாலும், வன விலங்குகள் உயிரிழப்பு தொடர்ந்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.