தீர்த்தகிரீஸ்வரர் கோயிலின் செம்பு பட்டயம், வீர வாள் ஆட்சியரிடம் ஒப்படைப்பு

தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான பழங்கால செம்பு பட்டயம், வீர வாளினை முதியவர்கள் ஆட்சியரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2021-10-26 05:30 GMT

அரூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான பழங்கால செம்பு பட்டயம் மற்றும் வீர வாளினை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைத்த முதியவர்கள்.

தர்மபுரி மாவட்டம், வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த மாணிக்க ஆச்சாரி மகன்கள் தங்கவேல், பழனி, ராமமூர்த்தி ஆகியோர் தங்களது கிராமத்தில் வசித்து வருகின்றனர். தொடர்ந்து மூவரும் தங்களது சொந்த ஊரான தீர்த்தமலையில் இருந்து, தற்பொழுது வெள்ளாளப்பட்டியில் விவசாயம் செய்து வசித்து வருகின்றனர்.

இவர்களது முன்னோர்கள் தீர்த்தமலையில் உள்ள பிரசித்தி பெற்ற பழங்கால தீர்த்தகிரீஸ்வரர் ஆலயத்தில் ஊழியம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது கோவிலுக்கு சொந்தமான பழங்கால செம்பு பட்டயம் மற்றும் வீர வாள் ஒன்று இவர்களது வீட்டில் இருந்துள்ளது. ஆனால் முன்னோர்கள் தற்பொழுது உயிரிழந்த நிலையில், வீட்டில் இருந்த பொருட்கள் தற்போது உள்ளவர்களுக்கு தெரியவில்லை.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கவேல், பழுதாகிய வீட்டை இடித்துவிட்டு புதிதாக வீடு கட்டும் பணியில் தொடங்கியுள்ளார். அப்போது வீட்டிலிருந்த பொருட்களை வேறு இடத்திற்கு மாற்றும்போது, வீட்டில் செம்பு பட்டயம் மற்றும் வீர வாள் இருந்தது தெரியவந்துள்ளது. அந்த செம்பு பட்டையில் ஓலைச் சுவடியில் உள்ள தமிழ் எழுத்துக்களை போல இரண்டு புறமும் எழுதியுள்ளது. இதனை தொடர்ந்து தொல்லியல் ஆய்வாளர்களிடம் இந்த செம்பு பட்டயம் மற்றும் வீர வாள் குறித்து கேட்டறிந்து உள்ளனர்.

இதனை அறிந்த அரூர் திருவிக நகரைச் சேர்ந்த செந்தில் கண்ணன் என்பவர் இந்த செம்பு பட்டயம் மற்றும் வீர வாளினை தன்னிடம் வழங்குமாறு கேட்டுள்ளார். இதனை தங்கவேல் குடும்பத்தினர் மறுத்துள்ளனர். இதனை அடுத்து செந்தில் கண்ணன் கோட்டப்பட்டி காவல் நிலையத்தில், அந்த செம்பு பட்டயம் மற்றும் வீரவாள் பெற்றுத்தருமாறு புகார் அளித்துள்ளார்.

இதனை அறிந்த தங்கவேல் குடும்பத்தினர் தங்களிடம் உள்ள தீர்த்தமலை கோவிலுக்கு சொந்தமான பழங்கால செம்பு பட்டை மற்றும் வீர வாளினை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினியை சந்தித்து செம்பு பட்டயம் மற்றும் வீர வாளினை ஒப்படைத்தனர்.

தொடர்ந்து பழங்கால பொருட்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, தருமபுரி மாவட்ட தொல்லியல் துறைக்கு சொந்தமான அகழ் வைப்பகத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். மேலும் செம்பு பட்டையில் இருப்பது குறித்தும் இந்த பொருட்கள் எந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்தும் ஆய்வு செய்ய தொல்லியல் துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் தங்கள் வீட்டில் இருந்த பழங்கால செம்பு பட்டை மற்றும் வீர வாளினை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்த முதியவர் தங்கவேல் குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியர் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தார்.

Tags:    

Similar News