அரூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைப் பணிகள் தொடக்கம்
அரூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைப் பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
அரூரை அடுத்த கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைப் பணிகளை மாநில வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடக்கி வைத்தார்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2021-22ஆம் அரவைப் பருவத்திற்கான கரும்பு அரவைப் பணிகள் தொடக்க விழா தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில், மாநில வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கரும்பு அரவைப் பணிகளை தொடக்கி வைத்து பேசுகையில், தருமபுரி மாவட்டத்தில், நிகழாண்டில் 7, 215 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு பயிர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 2,40,000 மெட்ரிக். டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கரும்பு தோட்டங்களிலிருந்து சர்க்கரை ஆலைக்கு கரும்புகளைக் கொண்டு வந்து சேர்க்கும் பணியில் 95 லாரிகள், 74 டிராக்டர்கள், 35 டிப்பர், 17 மாட்டு வண்டிகளும் ஈடுபடுத்தப்படவுள்ளது.
நடப்பாண்டில் பருவமழை அளவு அதிகம் இருப்பதால், 2022-23 ஆம் ஆண்டு கரும்பு அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலையில் முழு அளவு அரவைத் திறனை எட்டுவதற்காக 14,000 ஏக்கரில் கரும்பு பயிர்கள் பயிரிடப்பட்டு 4,30,000 மெட்ரிக். டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கரும்பு வெட்டும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கவும், வெட்டுக் கூலியை குறைக்கவும் சர்க்கரை ஆலையில் இரண்டு கரும்பு அறுவடை இயந்திரங்களும், இயந்திரம் மூலம் அறுவடை செய்த கரும்பை ஆலையில் இறக்கவதற்காக, கரும்பு இறக்கும் இயந்திரமும் பயன்பாட்டில் உள்ளது.
எனவே, வேளாண் இயந்திரங்கள் மற்றும் கரும்பு வெட்டும் இயந்திரங்களை பயன்படுத்த ஏதுவாக விவசாயிகள் நான்கரை அடி இடைவெளியில் அகலப்பார் முறையில் கரும்பு பயிர்களை நடவு செய்ய வேண்டும். மேலும், கரும்பு விவசாயிகள் மாநில அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெற்று வேளாண் பணிகளை சிறந்த முறையில் செய்ய வேண்டும் என்றார்.
இதில், எம்எல்ஏக்கள் ஆ.கோவிந்தசாமி, வே.சம்பத்குமார், கூடுதல் ஆட்சியர் இரா.வைத்திநாதன், சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநர் ரஹமதுல்லா கான், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சு.ராமதாஸ், தலைமை கரும்பு அரவை அலுவலர் தாமோதரன், சர்க்கரை ஆலையின் தலைவர் விஸ்வநாதன் உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.