அரூர் அருகே தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பவுர்ணமி நாளில் வீரபத்திரன் சுவாமியை ஊர்வலமாக எடுத்து சென்று, வயல் வெளியில் சுவாமியை வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.

Update: 2021-08-22 14:15 GMT

அரூர் அருகே தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

அரூர் அருகே தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள்  நேர்த்திக்கடன்  செலுத்தினர் 

அரூர் அருகே மந்திகுளம்பட்டி கிராமத்தில் குரும்பர் மக்களின் பாரம்பரிய திருவிழா நடைபெற்றது.இவ்விழாவில் தலையில் தேங்காய் உடைத்து ஆண், பெண் பக்தர்கள் வினோத வழிபாடு செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மந்திகுளம்பட்டி கிராமத்தில் குரும்பர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த சமூக மக்களின் குல தெய்வமான வீரபத்திரசுாவமி கோயில் திருவிழா, ஆண்டு தோறும் ஆடி பெருக்கு தினத்தில் தொடங்கி பவுர்ணமி வரை பல்வேறு கிராமங்களில் நடைபெறுவது வழக்கம்.

இந்த திருவிழாவில் ஆண்கள், பெண்கள் என அனைவரும் விரதமிருந்து தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தி, குல தெய்வமான வீரபத்திர சுவாமியை வழிபடுவது வழக்கம். தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மூன்று நாட்களுக்கு முன் தொடங்கியது.இதில் ஆண்கள், பெண்கள் என பலர் கையில் மஞ்சள் காப்பு கட்டி விரதமிருந்து வந்தனர். தொடர்ந்து இன்று பவுர்ணமி நாளில் வீரபத்திரன் சுவாமி ஊர்வலமாக எடுத்து சென்று, வயல் வெளியில் சுவாமியை வைத்து, அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்தனர்.

இதனை தொடர்ந்து, சக்தி அழைத்து, அருள் வந்தாடும் பக்தர்களுக்கு,   வீரபத்திரா என முழங்கி ஆரவாரம் செய்து, பரம்பரை பூசாரிகள் தலையில் தேங்காய் உடைத்தனர். தொடர்ந்து இந்த திருவிழாவில் காப்பு கட்டி விரதமிருந்த ஆண்கள், பெண்கள் என எல்லோரும் தலையில் தேங்காய் உடைத்து,  தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினார்.

பின்னர். சாமிக்கு சிறப்பு அலங்காரமும் பூஜையும் நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஆண்டுதோறும் நடைபெறும் குரும்பர் இன மக்களின் பாரம்பரிய வீரபத்திரன் சாமி திருவிழாவில், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் வினோத வழிபாட்டினை காண, சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் திருவிழாவுக்கு  வந்து, சாமி தரிசனம் செய்தனர்.


Tags:    

Similar News