அரூரில் தடையில்லா சான்று வழங்க, ரூ.3500 லஞ்சம் பெற்ற கூட்டுறவு சங்க செயலர் கைது

அரூரில் டிராக்டர் கடனுதவி திருப்பி செலுத்தியதற்கு தடையில்லா சான்று வழங்க, ரூ.3500 லஞ்சம் பெற்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-01-04 17:00 GMT

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் முருகன்.

தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் கோட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி நாகராஜன்(87). இவர் டிராக்டர் வாங்க அரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியில் கடந்த 1982-ம் ஆண்டில் நில பத்திரத்தை அடமானமாக வைத்து ரூ.63 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்.

பின்னர் 1987-ல் இந்த கடனை அவர் திரும்ப செலுத்தி முடித்துள்ளார். ஆனால் அடமானமாக வைத்த பத்திரத்தை திரும்பப் பெற, கடன் தொகையை செலுத்தியதற்கான தடையில்லா சான்று ('நோ டியூஸ்') சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய நிலை இருந்தது.

இந்த சான்றிதழ் பெற வங்கியின் செயலாளர் முருகனை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அப்பொழுது சான்று வழங்க ரூ.5000 பணம் கேட்டு, சான்று வழங்காமல் அலைக்கழித்துள்ளார்.

இதனால் மனம் உடைந்த நாகராஜன், பேச்சுவார்த்தை நடத்தி ரூ.3500 கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் லஞ்சம் தர விரும்பாத நாகாரஜன், தர்மபுரி லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரை அணுகியுள்ளார். அப்பொழுது லஞ்ச ஒழிப்பு துறையினரின் வழிகாட்டுதல்படி, வங்கி செயலாளர் முருகனிடம், ரசாயனம் தடவிய 500 ரூபாய் தாள்கள் 7 என, ரூ.3500 பணத்தை விவசாயி நாகராஜன் லஞ்சமாக கொடுத்துள்ளார்.

அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் முருகனை கைது செய்ய உள்ளே நுழைந்தனர். அதைக் கண்டதும் முருகன் தன்னிடம் இருந்த பணத்தை கழிப்பறைக்குள் சென்று வீசி தண்ணீரை திறந்து விட்டுள்ளார். இதனை கண்ட லஞ்ச ஒழிப்பு த்றையினர் துப்புரவு பணியாளர்கள் உதவியுடன், கழிப்பறையில் இருந்து தண்ணீர் வெளியேறும் குழாயை உடைத்து, ஏழு 500 ரூபாய் தாள்களை, கைப்பற்றினர். தொடர்ந்து முருகனை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அரூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News