அரூரில் ட்ரோன் கேமரா உதவியுடன் ஊரடங்கு கண்காணிப்பு!
அரூர் நகரில் பொதுமுடக்கத்தின் போது பொதுமக்கள் நடமாட்டத்தை ட்ரோன் கேமரா உதவியுடன் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ள நிலையில், கடந்த மே 10ம் தேதி முதல் பொதுமுடக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அரூர் பகுதியில் தினந்தோறும் பொதுமக்கள் வெளியில் நடமாடி வருகின்றனர். ஒரு தெருவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தால், உடனடியாக அடுத்த தெருவுக்கு இளைஞர்கள் தாவி விடுகின்றனர். அது போன்ற சமயங்களில் போலீசாருக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.
அதனை போக்கும் வகையில், அரூர் காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் இன்று (18ம் தேதி) ட்ரோன் கேமரா உதவியுடன் மக்கள் நடமாட்டத்தினை கண்காணித்து வந்தனர்.
வெளியில் தேவையின்றி சுற்றித்திரிபவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர். சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.