அரூர், மொரப்பூர் பகுதி மரவள்ளியில் நோய் தாக்குதல்: விவசாயிகள் கவலை
அரூர், மொரப்பூர் பகுதி மரவள்ளியில் நோய் தாக்குதல் இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.;
தர்மபுரி மாவட்டம், அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார், தீர்த்தமலை, நரிப்பள்ளி, வேட்ரப்பட்டி, கீழ்மொரப்பூர், எம். வெளாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ளனர். இதில், தாய்லாந்து வெள்ளை, தாய்லாந்து கருப்பு, முள்ளுவாடி, ரோஸ் உள்ளிட்ட ரகங்கள் அடங்கும். இந்நிலையில், மூன்று மாதங்கள் வயதுடைய மரவள்ளிக்கிழங்கு செடியில் நோய் தாக்குதல் காணப்படுகிறது.
இது குறித்து விவசாயிகல் கூறியதாவது: கொளகம்பட்டியில் தற்போது, மரவள்ளிக்கிழங்கு செடியில், செம்பேன் மற்றும் மாவுபூச்சி தாக்குதல் உள்ளது. இதனால், செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வயலில் நோய் பாதிப்பு தொடங்கினால் அடுத்தடுத்துள்ள விவசாயிகளின் மரவள்ளி வயல்களையும், இந்நோய் தாக்குதல் விட்டு வைப்பதில்லை. நோய் தாக்குதலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்தாண்டு, இந்நோய் தாக்குதலால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.