அரூர் கோயிலில் 30 பவுன் நகைகள், பணம் திருட்டு; போலீசார் விசாரணை

அரூரில் ஊஞ்சல் மாரியம்மன் கோயில் மேற்கூரையை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்பு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-08-22 14:30 GMT

நகைகள் கொள்ளைபோன கோவில்.

தருமபுரி மாவட்டம், அரூர் அம்பேத்கர் நகரில் அருள்மிகு ஸ்ரீ ஊஞ்சல் மாரியம்மன் கோயில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளது. இந்த கோயிலின் பூசாரி பரிமளா கடந்த வெள்ளிக் கிழமை வரலட்சுமி விரத பூஜைக்காக அம்மனை அலங்கரித்து பூஜை செய்துள்ளனர். தொடர்ந்து நகைகள் கோயிலிலேயே வைத்துவிட்டு, மறுநாள் சனிக் கிழமை கோயிலில் பூஜை செய்துள்ளார்.

மேலும் ஞாயிற்றுக் கிழமை பவுர்ணமி பூஜை என்பதால், நகைகளை வீட்டுக்கு எடுத்துச் சென்று விடலாம் என நினைத்து கோயிலை பூசாரி பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

மறுநாள் விடியற்காலையில் பௌர்ணமி பூஜை செய்வதற்கு வந்து கோவிலை திறந்தபோது, கோவில் கதவு திறந்தும், மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கோவில் பூசாரி உள்ளே சென்று பார்த்துள்ளார். கோவிலில் உள்ள 2 பீரோகளும் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து பீரோவில் வைத்திருந்த சாமியின் தங்க நகைகள் தங்க காசுமாலை, 300 தங்க குழல்கள், தங்க மூக்குத்திகள், 2 வெள்ளி ஒட்டியானம், 180 வெள்ளி தாலி குழல், வெள்ளி முக கவசம், பஞ்சலோக முக கவசம் உள்ளிட்ட சுமார் 10 இலட்சம் மதிப்புள்ள 25 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

மேலும் கோயில் உண்டியல், நவகிரக சிலைகள் அமைப்பதற்காக வைத்திருந்த ரூ. 30,000 பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த தகவலறிந்த ஊர் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கைரேகை நிபுணர்களை வரவழைத்து, கோயிலில் சிதறி கிடந்த பொருட்களின் மேல் பதிவான கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர்.

இந்நிலையில், கோவில் அமைந்துள்ள பகுதியில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த கொள்ளை சம்பவத்தில், ஒரு குழுவாக இணைந்து தான் ஈடுபட்டிருக்க முடியும்.

எனவே உள்ளூர் பகுதியை சேர்ந்தவர்களுக்கு இதில் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது என இந்த கோவில் பகுதியில் அடிக்கடி வருபவர்கள் குறித்த விவரங்களை காவல் துறையினர் சேகரித்து, அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தொடர்ந்து கோவிலில் உள்ள 10 இலட்சம் மதிப்பிலான தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பொதுமக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News