புத்தாண்டு கொண்டாட்டம்: கட்டுப்பாடு விதிக்குமா வனத்துறை?
கோவை வனப்பகுதியில் உள்ள ரிசார்ட்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்க உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை
கோவையில் உள்ள வனப்பகுதிகளான ஆனைகட்டி, மாங்கரை, சிறுவாணி, மதுக்கரை, எட்டிமடை, தொண்டாமுத்துார், மேட்டுப்பாளையம், காரமடை, பெ.நா.பாளையம், என வனப்பகுதியை ஒட்டிய பல இடங்களில், 100க்கும் மேற்பட்ட ரிசார்ட்டுகள், ஹோட்டல்கள் இயங்கி வருகின்றன.
இந்த ரிசார்ட்டுகள் அனைத்தும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகின்றன. ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் இது போன்ற ரிசார்ட்டுகளில் களைகட்டும். இதற்காக, பலரும் ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தே புக்கிங் செய்ய துவங்கி விடுவர்.
பெரும்பாலானவற்றில் இளைஞர்களை கவரும் வகையில், மது விருந்து, நீச்சல் குளம், கேம்ப் ஃபயர், ஒன்றாய் ஆடி பாட வசதியாக, புரொஜக்டர் மற்றும் சவுண்ட் சிஸ்டம் என பல்வேறு வசதிகள் இருக்கும்.
ஆனால் இது போன்ற ஏற்பாடுகள் சமவெளிப்பகுதிகளில் இருந்ததால் கவலையில்லை. ஆனால் வனப்பகுதி என்பதால், புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்களின் செயல்பாடுகள், வனவிலங்குகளை தொந்தரவு செய்வதாக இருக்கும். இதனால், வனவிலங்குகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுவதோடு, மனித விலங்கு மோதல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பதால் வனத்துறையினர் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் புத்தாண்டு தினத்தன்று கண்காணிப்பிலும் ஈடுபட வேண்டும் எனவும் வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, வன உயிரின ஆர்வலர்கள் கூறுகையில், எட்டிமடை, ஆனைகட்டி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் ஒரு சில ரிசார்ட்டுகளில், வாடிக்கையாளர்களை அத்துமீறி வனப்பகுதிக்குள் அழைத்துச் செல்கின்றனர். இரவு நேரங்களில் வனவிலங்குகளை காண, டிரெக்கிங் அழைத்துச் செல்வது போன்ற செயல்களிலும் ரிசார்ட் நிர்வாகத்தினர் ஈடுபடுகின்றனர். இதற்கு தனிக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மேலும் புத்தாண்டு தினத்தன்று இரவில், அதிக வலி எழுப்பும் சவுண்ட் ஸ்பீக்கர்களை வெளியில் வைத்து இளைஞர்கள் நடனமாடுவர். மேலும் மீதமான உணவை, பிளாஸ்டிக் பைகளில் போட்டு வனப்பகுதியில் வீசுகின்றனர். இவற்றை உண்ணும் சிறுத்தை, கரடி, செந்நாய் போன்ற விலங்குகள் பாதிக்கப்படுகின்றன. மேலும் உணவு சுவை கண்ட மிருகங்கள் ஊருக்குள் நுழைவதற்கும் இது போன்ற செயல்கள் வாய்ப்பு ஏற்படுத்தி விடுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் இவற்றை வனத்துறையினர் கண்டுகொள்வதில்லை. எனவே, புத்தாண்டு கொண்டாட்டங்களை வனப்பகுதியில் நடத்துவதற்கு வனத்துறையினர் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என தெரிவித்தனர்.