தமிழகத்தில் மக்களுக்கு பயனில்லா பொம்மை ஆட்சி: வால்பாறை எம்.எல்.ஏ.
தமிழகத்தில் மக்களுக்கு பயனில்லா பொம்மை ஆட்சி நடப்பதாக வால்பாறை எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த சோலையார் அணை பகுதியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்த தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் டி.கே. அமுல் கந்தசாமி, நகர செயலாளர் மயில் கணேசன், மாநில தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் தலைவர் வால்பாறை வீ. அமீது ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி பேசுகையில், தமிழகத்தில் நடக்கின்ற திமுக ஆட்சி ஒரு விளம்பரம் ஆட்சி. பொதுமக்களுக்கு எந்தவித பயனும் இல்லாத ஒரு பொம்மை ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. காலையில் எழுந்தவுடன் அப்பனும் மகனும் போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்கள். நல்ல பல திட்டங்கள் என அறிவிப்பதோடு சரி. பொதுமக்களுக்கு எந்த ஒரு சலுகைகளும் எந்தவித பயன்பாடுகளும் கிடையாது.
மேலும் வால்பாறை பகுதியில் நகராட்சி நிர்வாகத்தில் அனைத்து உறுப்பினர்களும் திமுகவைச் சேர்ந்தவர்கள். அங்கு எந்த ஒரு பணிகள் செய்தாலும், சரிவர செய்வது இல்லை. அதில் கூட்டு களவாணியாக செயல்பட்டு கொள்ளையடித்து கொண்டிருக்கிறார்கள்.
கடந்த கால ஆட்சியில் பெண்களுக்கு தாலிக்கு தங்கம், கல்வி உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, லேப்டாப், அம்மா உணவகம், அம்மா மருந்தகம் உள்ளிட்ட மக்களின் பயன்பாட்டிற்கு உண்டான எண்ணற்ற அனைத்து சலுகைகளும் திமுக அரசால் தவிர்க்கப்பட்டுள்ளது.
தற்போது விடியல் ஆட்சி பெண்களின் உரிமை தொகையை பாரபட்சமாக செயல்படுகிறது. வால்பாறை நகராட்சியில் நிரந்தரமான ஆணையாளர் இல்லை. நகராட்சி அலுவலகத்தில் உள்ள பணத்தை கொள்ளையடித்து செல்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்” எனத் தெரிவித்தார்.