வால்பாறையில் வீடு இடிந்து பாட்டி, பேத்தி உயிரிழப்பு
பொதுமக்கள் இன்று அதிகாலை அந்த வழியாக வந்த போது ராஜேஸ்வரி என்பவரது வீடு இடிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை துவங்கியது முதல், வால்பாறையில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முதல் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே வால்பாறையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இடைவிடாமல் தொடர் கன மழை பெய்து வந்தது. கடந்த இரண்டு நாட்களாக மழை அளவு சற்று குறைந்திருந்த போதும், தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்து வந்தது. இதனால் ஆங்காங்கே லேசான நிலச்சரிவுகள் ஏற்பட்டு வந்தது. நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளின் அருகே இருக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களில் வசிக்குமாறு அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் சோலையாறு அணை அமைந்துள்ள பன்னிமேடு இடது கரை பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் இன்று அதிகாலை அந்த வழியாக வந்த போது ராஜேஸ்வரி என்பவரது வீடு இடிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அருகில் சென்று பார்த்த போது வீட்டிற்குள் ராஜேஸ்வரி மற்றும் அவரது 14 வயது பேட்டி ஜனனி பிரியா ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.
இது குறித்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தற்போது மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்ப காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் வீடு இடிந்து இருவரும் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.