தொடர் மழை காரணமாக கவியருவியில் வெள்ள பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

ஆழியார் கவியருவியில் காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.;

Update: 2024-10-21 04:45 GMT

கவியருவி 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அணைக்கு அருகே குரங்கு அருவி என அழைக்கப்படும் கவியருவி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அருவிக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்து செல்வது வழக்கம். இதனிடையே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வடகிழக்கு பருவ மழை துவங்கி பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ஆழியார் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அதன் ஒரு பகுதியாக ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆனைமலை அடுத்த ஆழியார் கவியருவியில் காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் தடுப்பு வேலிகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது . இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது. அருவிக்கு வரும் நீரின் அளவு சீரான பின்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி அளிக்கப்படும் என வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர். ஆழியார் சோதனை சாவடி அருகே கவியருவியில் குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News