கவியருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் திடீரென மழை பெய்ததன் காரணமாக கவி அருவிக்கு நீர் வரத்து அதிகரித்ததால் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆழியார் கவி அருவி அமைந்துள்ளது. இந்த அருவியில் குளிக்க நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். குறிப்பாக விடுமுறை நாட்களில் அதிக அளவிலான பயணிகள் குடும்பத்துடன் குளிக்க வந்து செல்கின்றனர். இதனிடையே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் அடித்து வந்தது.
தொடர் விடுமுறை காரணமாகவும், வெயிலின் சூட்டை தணிக்கவும் இன்று சுற்றுலா பயணிகள் கவி அருவிக்கு படையெடுத்தனர். நீண்ட வரிசையில் காத்து நின்று அருவியில் வரும் சிறிதளவு நீரில் சுற்றுலா பயணிகள் குளித்து சென்றனர். இன்று மதியத்திற்கு மேல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் திடீரென மழை பெய்தது. இதன் காரணமாக கவி அருவிக்கு நீர் வரத்து அதிகரித்தது. மேலும் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை விரைவாக வெளியேறும்படி வனத்துறையினர் அறிவித்தனர்.
தொடர்ந்து அதிக அளவில் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அருவியில் நீர்வரத்து சீரான பின்பு அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.