தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வேலை நேரத்தினை குறைத்திட சிஐடியு கோரிக்கை

உணவு அத்தியாவசிய பட்டியலில் தேயிலைத் தொழில்

Update: 2021-05-11 12:15 GMT

கொரோனோ தொற்று நாடு முழுவதும் அதிதீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனோ தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வேலை நேரத்தை 4 மணி நேரமாக குறைக்க வேண்டும் என சிஐடியூ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தின் (சிஐடியு) கோவை மாவட்ட பொதுச் செயலாளர் பரமசிவம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 'தமிழகத்தில் கொரோனோ பெருந்தொற்று அதிவேகமாக பரவிவருவதால், தமிழக அரசால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வால்பாறை பகுதியில் 52 தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த ஊரடங்கு காலத்தில் உணவு அத்தியாவசிய பட்டியலில் தேயிலைத் தொழில் கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போது கோவை மாவட்டம் முழுவதும் கொரோனோ தொற்று அதிகளவில் பரவி வருவதால் வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இவர்களின் அச்சத்தைப்போக்குகின்ற வகையில் தொழிலாளர்கள் அனைவருக்குமான வேலை நேரத்தினை குறைத்திட வேண்டும். சராசரியாக நாளொன்றிற்கு 8 மணி நேரம் வேலை செய்வதை, 4 மணி நேரமாக குறைத்திட வேண்டும்.

அதேபோல ஒரு நாளைக்கான முழு ஊதியமும் குறைக்காமல் வழங்க வேண்டும். மேலும் வேலை செய்கின்ற இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை எஸ்டேட் நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.

முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். கிருமிநாசினிகளை ஒவ்வொரு எஸ்டேட் நிர்வாகத்திலும் தொழிலாளர்களின் உபயோகத்திற்காக வைக்க வேண்டும்.

தேயிலைத் தோட்டங்களில் கொரோனோ தொற்று கண்டறியும் சோதனை நடத்திட வேண்டும். அனைவருக்கும் நோய் எதிர்ப்பு மற்றும் சத்து மாத்திரைகள் வழங்கிட வேண்டும். கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவுகளையும்,அத்தியாவசிய தேவைகளையும் , நிவாரணங்களையும் அந்தந்த நிர்வாகமே அளித்திட வேண்டும்.

மேலும் வால்பாறை நகராட்சி சார்பில் அனைத்து தேயிலைத் தோட்டக் குடியிருப்புகளிலும் கிருமி நாசினி மருந்துகள் தெளித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனோ ஊரடங்கு காலத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டுதமிழக முதல்வரும், கோவை மாவட்ட ஆட்சியரும் உரிய தீர்வு காணவேண்டும்.'இவ்வாறு கூறியுள்ளார்.

Tags:    

Similar News