தொடர் விடுமுறை: கவியருவிக்கு 5 நாளில் 16 ஆயிரம் பேர் வருகை
ரம்மியமாக கொட்டும் தண்ணீரில் ஒரே நாளில் 3,500க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டு சென்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணை அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவியில் மழை இருக்கும் காலகட்டத்தில் தண்ணீர் அதிகளவு வருவது மட்டுமின்றி அந்த நேரத்தில் அங்கு குளிக்க உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகமாக இருக்கும்.
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைந்ததன் காரணமாக கவியருவியில் கடந்த சில வாரமாக தண்ணீர் வரத்து சற்று குறைந்தது.
இருப்பினும் ரம்மியமாக கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டு சென்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக கவியருவிக்கு உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர்.
காணும்பொங்கலையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. ஒரே நாளில் 3,500க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.
சுற்றுலா பயணிகள், கவியருவியில் தங்கள் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்தனர். வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்ததால் குளிப்பதற்கு போதிய இடமின்றி சுற்றுலா பயணிகள் தவித்தனர். இருந்த போதிலும் பலரும் வெகுநேரம் காத்திருந்து குளித்து சென்றனர்.
சில சுற்றுலா பயணிகள் அருவியில் ஒரு பகுதியில் ஆங்காங்கே வழிந்தோடும் தண்ணீரிலும், குட்டை போல் தேங்கிய தண்ணீரிலும் குளித்து மகிழ்ந்தனர்.
பொங்கல் விடுமுறை காரணமாக கடந்த 5 நாட்களில் மட்டும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கவியருவிக்கு வந்துள்ளனர்.