நகை பறிப்பு, திருட்டு கொள்ளை சம்பவங்கள் கோவையில் அதிகரித்துள்ளது : எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

Coimbatore News- இனிவரும் காலங்களில் தங்க நகை பட்டறை தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும் என்று வேலுமணி கூறினார்.;

Update: 2024-04-30 09:30 GMT
நகை பறிப்பு, திருட்டு கொள்ளை சம்பவங்கள் கோவையில் அதிகரித்துள்ளது : எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

Coimbatore News- எஸ்.பி. வேலுமணி

  • whatsapp icon

Coimbatore News, Coimbatore News Today- கோவையில் கடந்த 22 ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்ற தங்க நகைப்பட்டறை உரிமையாளர் ராஜேந்திரன் மற்றும் ஊழியர் சாந்தகுமார் ஆகிய இருவரை காரில் வந்த மர்ம கும்பல் தாக்கி 33 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கொள்ளையார்களால் தாக்குதலுக்கு உள்ளான ராஜேந்திரன் மற்றும் சாந்தகுமாரை முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து போலீஸ் அதிகாரியிடம் செல்போனில் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, கோவை செல்வபுரம் சுற்றுவட்டார பகுதியில் நகைக் கடை உரிமையாளர்கள் கொடுக்கும் தங்கத்தை வாங்கி நகையாக செய்து கொடுக்கும் பணிகளை குடிசைத் தொழிலாக ஏராளமான மக்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி செல்வபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் சாந்தகுமார் இருசக்கர வாகனத்தில் நகைகளை எடுத்துக்கொண்டு சென்றபோது காரில் வந்த மர்ம நபர்கள் திட்டமிட்டு இருவரையும் அறிவால் மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி நகைகளை பறித்து சென்றனர். அரிவாள், இரும்பு கம்பிகளால் தாக்கி நகையை பறிக்கும் மோசமான கலாச்சாரம் கோவையில் ஏற்பட்டுள்ளது. இதுவரை போலீசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர். ஆனால் நகைகள் இன்னும் மீட்டுக் கொடுக்கப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் தங்க நகை பட்டறை தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும். கோவையில் காவல்துறை சுயமாக இயங்க வேண்டும். இங்கு காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. நகை பறிப்பு, திருட்டு கொள்ளை சம்பவங்கள் கோவையில் அதிகரித்துள்ளது. அதனை அரசு தடுத்து நிறுத்த வேண்டும், இல்லையென்றால் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும். கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் உத்தரவின் பேரில் கோவையில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் நீர் மோர் பந்தல் திறந்து வருகிறோம். தொடர்ந்து அந்த பணிகள் நடைபெறும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News