தாயை பிரிந்த குட்டி யானையை மீண்டும் சேர்த்து வைக்க வனத்துறை தீவிர முயற்சி..!

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து அனுபவம் வாய்ந்த யானை பாகன்களை வரவழைக்க திட்டமிட்டனர்.

Update: 2024-06-06 08:45 GMT

தாயைப்பிரிந்த குட்டி யானை 

கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் கடந்த 30ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று மூன்று மாதமான குட்டி யானையுடன் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த யானைக்கு வனத்துறையினர் ஐந்து நாட்கள் சிகிச்சை அளித்தனர். இதனிடையே தாயுடன் இருந்த குட்டி யானையை வனத்துறையினர் பராமரித்து வந்த நிலையில், அந்த குட்டி யானை ஒரு யானைக் கூட்டத்துடன் சென்றது.

இதனை வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில், உடல் நலம் தேறிய தாய் யானை மீண்டும் அதே வனப்பகுதிக்குள் விடப்பட்டது. இந்த நிலையில் கூட்டத்துடன் சுற்றி வந்த குட்டி யானை, நேற்று காலை கூட்டத்தில் இருந்து பிரிந்து தனியார் தோட்டத்திற்குள் சுற்றி வந்தது.


இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற வனத்துறையினர் தாய் யானை இருக்கும் குப்பேபாளையம், அட்டுக்கல் வனப்பகுதிக்கு குட்டி யானையை கொண்டு வந்தனர். பின்னர் குட்டி யானைக்கு பழங்கள் இளநீர் கொடுக்கப்பட்டு அதன் தாயுடன் சேர்க்கும் முயற்சி நடைபெற்றது.

பலகட்ட முயற்சிக்கு பின்னரும் தாய் யானையுடன் குட்டி யானை இரவு வரை சேராததால், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து அனுபவம் வாய்ந்த யானை பாகன்கள் வரவழைக்க திட்டமிட்டனர். அதன்படி இன்று டாப்சிலிப் கோழிக்கமுதி யானைகள் முகாமில் இருந்து வரும் யானை பாகன்கள் இன்று மாலை குட்டி யானையை தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று தாய் யானையுடன் குட்டியை சேர்க்கும் முயற்சி நடைபெறும் போது மழை குறுக்கீடு, தேனீக்கள் தொந்தரவு என பல்வேறு சிக்கல்கள் இருந்த போதிலும் குட்டியை தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் யானை பாகன்கள் உதவியுடன் அதனை சேர்க்க முடிவு செய்துள்ளதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News