கனிம வள கொள்ளையை தடுக்க கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்
கனிம வள கொள்ளையை தடுக்க கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் கோவை எட்டிமடை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;
கனிம வள கொள்ளையை தடுக்க கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் கோவை எட்டிமடை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உலகின் 15 சதவீத மக்கள், 25 சதவீத விலங்குகள் மலைகளில் வசிப்பது கண்டறியப்பட்டுள்ளது. அனைத்து உயிர்களுக்கும் தேவையான நன்னீரை மலைகள் தருகின்றன.மலைகளின் முக்கியத்துவத்தை கருதி, அவற்றை பாதுகாக்கும் வகையில் 2002-ம் ஆண்டை பன்னாட்டு மலைகளின் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக 2003-ம் ஆண்டு முதல் டிச.11-ம் தேதியை ‘சர்வதேச மலைகள் தினமாக’ உலக நாடுகள் கடைபிடித்து வருகின்றன.
இன்றைய சூழலில் மலைகள் பேரழிவுகளை எதிர் கொள்கின்றன. கால நிலை மாற்றங்கள், கனிம வளங்களுக்காக பெயர்த்து எடுத்தல் போன்றவற்றால் மலை வளங்களும், மலைகளின் மென்மையான சூழலும் அழிந்து வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைகள் நிறைந்த தமிழகத்தில் மலைகளில் வாழ்கின்ற பழங்குடியின மக்கள் கனிம வளங்களுக்காக அச்சுறுத்தப்படுகின்றனர். விலங்குகள், தாவரங்கள் மற்றும் பல்லுயிர்கள் அழிக்கப்படுகின்றன.
கோவை மாவட்டத்தில் இயற்கை சூழல் மிக்க வனப் பகுதியை ஒட்டியுள்ள பொள்ளாச்சி, ஆனைமலை கிணத்துக்கடவு, மதுக்கரை, தொண்டாமுத்தூர், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், சூலூர், ஆகிய பகுதிகளில் ஏராளமான கனிம வளங்கள் சூறையாடப்பட்டு வருகிறது.
இதனை கனிம வளத்துறை மாசு கட்டுப்பாட்டு வாரியம், வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் மறைமுகமாக அனுமதிப்பதாக கூறப்படுகிறது. இதனால் கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள இயற்கை வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில்,சொத்துக்களான கனிம வளங்களை சட்டவிரோதமாக கொள்ளையடிக்கும் செல்வாக்கான நபர்களை அரசு, கடுமையாக கையாள வேண்டும்
உரிமம் இல்லாமல் கனிம வளங்கள் எடுக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், இந்த விஷயத்தில் உடனடி கவனம் செலுத்த வேண்டும் இது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை வெளியிட வேண் டும். வன உயிரினங்களை பேணவும், இயற்கை வளங்களை பாதுகாத்திடவும் கனிம வளங்கள் சூறையாடப் படுவதை தடுத்திடவும் தமிழக அரசு உரிய சட்ட விதிமுறைகளை உருவாக்க வேண்டும். உரிய விதிமுறைகளை பின் பற்றாத அரசு அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் கோவை எட்டிமடை பகுதியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாய சங்க கோவை மாவட்ட தலைவர் சு பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆர். பெரியசாமி, ஆறுச்சாமி, மணிகண்டன், ஆனந் த்ராஜ் குழந்தைவேல், தங்கராசு, பழனிசாமி மூர்த்தி, குணசேகரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.