போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
Statewide Human Chain Protest கொலை, கொள்ளை, போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தார்.;
Statewide Human Chain Protest
போதைப்பொருட்களை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் இன்று மாநிலம் தழுவிய மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. கோவை குனியமுத்தூர் பகுதியில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “தமிழகம் போதைப்பொருட்கள் தலைநகரமாக மாறும் சூழல் உள்ளது. போதைப்பொருளில் இருந்து மக்களை, இளைஞர்களை காப்பாற்ற அனைத்து மாவட்டங்களிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.
மக்களுக்காக போராடும் ஒரே இயக்கம் அதிமுக. திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவை கண்டிக்கும் ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி மட்டும் தான். போதைப்பொருட்களை கட்டுப்படுத்த வேண்டும்
தமிழ்நாடு மிக மோசமான நிலையில் உள்ளது. ஜாபர் சாதிக்கிடம் இருந்து 2 ஆயிரம் கோடி போதைப்பொருட்களை கைப்பற்றினார்கள். கொலை, கொள்ளை, போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது.
காவல் துறையினர் திமுகவிற்கு அடிமையாக இருக்கக் கூடாது. கோவை மாவட்டத்திற்கு திமுக எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக எம்.பி.க்களை யாராலும் பார்க்க முடியவில்லை. தேர்தல் வருவதால் டிசைன் டிசைனாக வந்து திமுகவினர் ஏமாற்றுவார்கள். கோவைக்கு எந்த திட்டமும் தராத திமுகவிற்கு பாடம் கற்றுத் தர வேண்டும். அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.