வெள்ளியங்கிரி மலையில் ஏழு டன் கழிவுகள் அகற்றம்

தற்போது சீசன் முடிவடைந்ததை தொடர்ந்து மலை பாதைகளில் தூய்மை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Update: 2024-06-12 03:30 GMT

குப்பைகளை அகற்றும் தன்னார்வலர்கள்

கோவை அருகே உள்ள வெள்ளியங்கிரி மலையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலையேறி வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிப்பது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலை ஏறினார்கள்.

ஏழாவது மலை ஏறும் முன்பு ஆறாவது மலையில் உள்ள ஆண்டி சுனை என்ற ஓடையில் குளித்துவிட்டு தங்கள் பழைய ஆடைகளை பக்தர்கள் வீசி செல்கின்றனர். இதனால் ஆறாவது மலை பகுதியில் ஏராளமான துணிகள் தேக்கம் அடைந்துள்ளன. அதேபோல பக்தர்கள் விட்டு சென்ற குப்பைகளும் மலைப்பகுதிகளில் தேங்கியுள்ளன.

தற்போது சீசன் முடிவடைந்ததை தொடர்ந்து மலைப் பாதைகளில் தூய்மை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. தற்போது முழு வீச்சில் அப்பணிகள் நடைபெற்று வருகிறது.

முதல் மூன்று மலைகளிலும் கடைசி இரண்டு மலைகளான ஆறு மற்றும் ஏழாவது மலைகளிலும் கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன. நான்காவது மற்றும் ஐந்தாவது மலைகளில் சுத்தம் செய்யும் பணி இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, தற்போது வரை வெள்ளியங்கிரி மலைப் பகுதிகளில் ஏழு டன் குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளன. இவற்றில் பெரும்பாலான பக்தர்களின் துணிகள் ஆகும். ஓடைப் பகுதிகளில் துணிகளை அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மழை காரணமாக சில நாட்களாக மலைப் பகுதிகளில் தன்னார்வலர்களால் சுத்தம் செய்ய முடியவில்லை. அவர்கள் கழிவுகளை சேகரித்து செங்குத்தான மற்றும் வழுக்கும் பகுதி வழியாக திரும்ப வேண்டியது இருப்பதால் கடினமான சூழ்நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவித்தனர்.

Tags:    

Similar News