தொடர் மழையால் சித்திரைச்சாவடி தடுப்பணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
Coimbatore News- தொடர் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. சித்திரைச்சாவடி தடுப்பணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
Coimbatore News, Coimbatore News Today- கோவையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதேபோல நீர் நிலைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 3 நாள்களாக மேற்குத் தொடா்ச்சி மலை மற்றும் கோவை சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை தீவிரமாக பெய்து வருகிறது. மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள ஓடைகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், நொய்யல் ஆற்றுக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. தொடர் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சித்திரைச்சாவடி தடுப்பணை நிரம்பி வழிகிறது.
இதேபோல புதுக்குளம், நரசாம்பதி, கோளராம்பதி, பேரூா் சொட்டையாண்டி குளம், குனியமுத்தூா் செங்குளம், கங்க நாராயண சமுத்திர குளம் உள்ளிட்ட குளங்களுக்கு நீா்வரத்து அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்டம் பேரூர் வழியாக செல்லும் நொய்யல் ஆற்றில் இருந்து வெளியேறும் தண்ணீர், ஆத்துப்பாலம் அருகேயுள்ள சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் உள்ள தடுப்பணைக்கு வருகிறது.
இதனிடையே நொய்யல் ஆற்றில் கலக்கப்படும் ராசாயண ஆலைக்கழிவுகள் மற்றும் கழிவு நீர் காரணமாக தடுப்பணையில் இருந்து வெளியேறும் நீர், நுரையுடன் வெளியேறி வருகிறது. மேலும் அப்பகுதியில் துர்நாற்றமும் வீசி வருகிறது. நொய்யல் ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். கோவை மாநகரப் பகுதிகளில் இன்று பரவலாக சாரல் மழை விட்டு விட்டு பெய்தது குறிப்பிடத்தக்கது.