மருத்துவ முகாமில் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் : மருத்துவர் போக்ஸோ வழக்கில் கைது..!

மாணவிகளுக்கு ஈஷா யோகா மையத்தில் பணியாற்றும் மருத்துவர் சரவணன் மூர்த்தி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக கூறி உள்ளனர்.

Update: 2024-09-06 10:45 GMT

அனைத்து மகளிர் காவல் நிலையம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள ஈஷா யோகா மையத்தின் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகள் செய்து வருகின்றனர். அதில் மருத்துவ முகாம்கள் அமைத்து, நடமாடும் மருத்துவ முகாம்கள் போன்றவை நடத்தப்படுகின்றன. பல்வேறு கிராமங்களுக்கு சென்று இலவச மருத்துவ முகாம்கள் அமைத்து இலவச மருத்துவ பரிசோதனைகள், மருந்துகள் வழங்குதல் போன்ற சேவைகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் நலத் துறையினர் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். அங்கு நடந்த முகாமின் போது, மாணவிகளுக்கு ஈஷா யோகா மையத்தில் பணியாற்றும் மருத்துவர் சரவணன் மூர்த்தி என்பவர் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக கூறி உள்ளனர்.

இதைத் தொடர்ந்து குழந்தைகள் நலத் துறையினர் பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினரிடம் அளித்தனர். இந்த புகாரின் பேரில் மாணவிகளுக்கு பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மருத்துவர் சரவணன் மூர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்ட கிராமப் பகுதிகளில் அவுட்ரீச் மருத்துவ வாகனத்தில் மருத்துவராக பணியாற்றியவர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு உள்ளதை அறிகிறோம் எனவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே ஈஷாவின் உறுதியான நிலைப்பாடு. இந்த வழக்கில் காவல்துறைக்கு முழுமையான ஒத்துழைப்பு அளித்து வருகிறோம் எனவும் ஈஷா யோகா மையத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.

Tags:    

Similar News