உக்கடம் பெரியகுளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட உக்கடம் பெரியகுளத்தில் மீன்கள் செதது மிதக்கின்றன. துர்நாற்றமும் வீசுகின்றன. மாநகராட்சி நிர்வாகம் செத்துபோன மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உக்கடம் பெரியகுளம் உள்ளது. சுமார் 327 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குளத்தின் கரையோரம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்றுள்ளன.
ஆனால், இந்த குளத்தில் கழிவுநீர் கலப்பதும், குளத்தில் ஆகாயத்தாமரை படர்வதும் குறையவில்லை. இந்நிலையில், ஆத்துப்பாலத்தில் இருந்து உக்கடம் பேருந்து நிலையம் நோக்கி வரும் கரையோரம் நூற்றுக்கணக்கான மீன்கள் குவியல், குவியல்களாக செத்து மிதந்து கொண்டிருந்தன. மேலும் தூர்நாற்றம் வீசுவதால் அவ்வழியாக செல்லும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "மீன்கள் செத்து மிதக்க கழிவு நீர் கலப்பே காரணம். துர்நாற்றம் வீசுவதால் உடனடியாக உயிரிழந்த மீன்களை அகற்ற வேண்டும்" எனத் தெரிவித்தனர்.