கோவையில் 100 சதவீத தடுப்பூசியை வலியுறுத்தி 50 கி.மீ. சைக்கிள் பயணம்
நூறு சதவீத கொரோனா தடுப்பூசிய வலியுறுத்தி, கோவைப்புதூர் முதல் சிறுவாணி வரை 50 கி.மீ சைக்கிள் பயணம் நடைபெற்றது.;
கோவை நேரு கல்வி குழுமம், கோவை பெடலர்ஸ் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் சார்பில், கோவைப்புதூர் முதல் சிறுவாணி வரை 50 கி.மீ சைக்கிள் பயணம் நடைபெற்றது. கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் முழுமை அடையவும் சுற்றுப்புற சூழலை பாதுகாக்க வலியுறுத்தியும் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இது குறித்து, பெடலர்ஸ் அமைப்பின் தலைவர் மற்றும் கோவை நேரு கல்வி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான டாக்டர். பி. கிருஷ்ண குமார் கூறியதாவது: பைக், கார்கள் போன்ற வாகனங்கள் வரத் தொடங்கிய பிறகு சைக்கிள் உபயோகமற்றதாக மாறிவிட்டது.
இப்போது மீண்டும் சைக்கிள் மீது இளம் தலைமுறையின் கவனம் திரும்பியிருக்கிறது. சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்கும் வகையில், இந்த சைக்கிள் பயணத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். கோவைப்புதூர் ஏ மைதானத்தில் துவங்கிய இந்த பயணம் சுண்டக்காமுத்தூர், பேரூர், பச்சாபாளையம், தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, நல்லூர் வயல், இக்கரை போளூவாம் பட்டி வழியாக சிறுவானியை அடைந்து மீண்டும் அதே பாதையில் கோவைப்புதூரை வந்தடைந்தது என்றார்.
முன்னதாக, இந்த பயணத்தை கோயம்புத்தூர், பீரங்கி படை பிரிவின், தேசிய மாணவர் படையின் கார்னல் சந்திர சேகர் மற்றும் ரோட்டரி மாவட்டம் 3201 ஆளுநர் ரோட்டேரியன் ராஜசேகரன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர்.