கோவையில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநில வாலிபர் கைது

கோவையில் 1.100 கிலோ எடை உள்ள கஞ்சா வைத்திருந்த பீகார் மாநில இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-10-15 15:30 GMT

கைது செய்யப்பட்ட பீகார் மாநிலத்தை சேர்ந்த பினைகுமார்.

கோவை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பேரூர் அடுத்த தீத்திபாளையம் பகுதியில் வட மாநில வாலிபர் கஞ்சா விற்பனை செய்வதாக பேரூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் விசாரணை நடத்தினர். ‘

அதில் அப்பகுதியில் இருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பினைகுமார் என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தில் இருந்து வந்து சூலூர் பகுதியில் தங்கி கட்டிட கூலி வேலை செய்து வருவதும், கூடவே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து காவல் துறை நடத்திய சோதனையில் அவரிடம் 1.100 கிலோ எடை உள்ள கஞ்சா இருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதேபோல போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News