நாட்டின் பாதுகாப்பிற்கு மீண்டும் மோடி அரசு அமைய வேண்டும்: அண்ணாமலை பேச்சு
நாட்டின் பாதுகாப்பிற்கு மோடி அரசு நமக்கு தேவை. வலிமையான நாட்டை உருவாக்க பாஜக வேண்டும் என அண்ணாமலை பேசினார்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் கடந்த 1998 ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தவர்களுக்கு இந்து அமைப்புகள் சார்பில் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்துத்துவா அமைப்பினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் மேடையில் உரையாற்றிய அண்ணாமலை, “26 ஆண்டுகளாக தொடர்ந்து இங்கு இணைந்து கொண்டு இருக்கிறோம். ஏன்? இங்கு நாம் தொடர்ச்சியாக இணைந்து கொண்டு இருக்கிறோம்? மாற்றம் வந்துவிடாதா என்று தான். 1997 ஆம் ஆண்டு லீக்கான ஜெயின் கமிஷன் விவகாரத்தை இந்தியா டுடே வெளியிட்டு இருந்தது. திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாட்டாலும் இப்படி தான் இருப்பார்கள் என்பதற்கு ஜெயின் கமிஷன் அறிக்கை தான் சான்று.
ராஜீவ் காந்தி கொலை செய்யப்படும் முன்பு தி.மு.க. ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. உளவுத்துறை அறிக்கை மீது தி.மு.க. அன்று கவனம் செலுத்தவில்லை.கோட்டை ஈஸ்வரன் கோவில் சம்பவம் நடந்த போது ஆட்சியில் இருந்தவர்கள் தான் திமுக. தேர்தலில் எத்தனை தோல்விகளை சந்தித்தாலும் மாறப்போவதில்லை. இதை நாம் உணரும் போது தான் மக்களுக்கான ஆட்சி நடக்கும். கோவை தொடர் குண்டுவெடிப்பில் 58 பேர் உயிரிழந்துள்ளார்கள். 250 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 6 இஸ்லாமியர் உயிரிழந்து உள்ளனர். இந்த கூட்டம் மதரீதியான கூட்டம் இல்லை, தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டம் தான் இது. இன்று கோவை ஆபத்தில் இருந்து தப்பித்து விட்டதா? இன்னும் தப்பவில்லை. தமிழ்நாடு இன்னும் ஆபத்தில் இருந்து தப்பவில்லை.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த சம்பவம் தற்கொலை படை தாக்குதல் என்றோம். ஆனால் சிலிண்டர் விபத்து என இவர்கள் என சொல்லுகிறார்கள். உயிரிழந்த முபின் வீட்டில் 130 பொருட்கள் கிடைத்தது. இதை பார்த்த பிறகும் இது சிலிண்டர் விபத்து என்று தான் காவல் துறை சொல்லுகிறது. என்.ஐ.ஏ சம்பவம் நடந்து 1 வருடம் 4 மாதம் கழித்து 4 முறை சோதனை செய்துள்ளது. 15 பேரை கைது செய்துள்ளனர். இன்னும் சிலிண்டர் விபத்து என்கிறார்கள். கோவை மாவட்டத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் தேர்தல் தான் 2024 நாடாளுமன்ற தேர்தல். குண்டு வெடிப்பு வழக்கில் 150 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது 16 பேர் சிறையில் உள்ளனர். அவர்களை வெளியே விட ஆட்சி செய்த கட்சியும், ஆட்சியில் உள்ள கட்சியும் விடுவிக்க வலியுறுத்தி வருகிறார்கள்.
உச்சநீதிமன்றம் இவர்களுக்கு பெயில் கொடுக்க கூடாதுன்னு சொல்லிருக்கிறது. ஆனால் இவர்களை விடுதலை செய்ய அரசியல் கட்சியினர் சொல்கிறார்கள். தேர்தல் நேரத்தில் இவர்களின் நாடகத்தை ஒழிக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் மேடையில் அரசியல் பேசக்கூடாது. ஆனால் இன்று நான் பேசியாக வேண்டிய சூழலில் உள்ளேன். பாராளுமன்ற வேட்பாளர்களின் முதல் வேலை இங்கு நினைவு துண் கட்டுவது தான். 2024 ஆம் ஆண்டு நாம் ஜன்னலை திறப்போம். 2024ம் ஆண்டு கதவை திறப்போம். நினைவு தூண்களில் உயிரிழந்த இஸ்லாமிய 6 பேரின் பெயர்களும் இடம்பெறும். தீவிரவாதிக்கு மதம் தெரியாது. மதம் பிடித்த யானையைவிட மதத்தை தவறாக படித்துவிட்டு கோவையில் திரிகிறார்கள். தமிழ்நாட்டில் கோவைக்கு இரண்டாவது என்.ஐ.ஏ காவல் நிலையம் வர வேண்டும். முக்கியமான வழக்குகளை இங்கு நடத்த வேண்டும். விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீவிரவாதி உருவாகும் இடத்திலிருந்து பிடிக்க வேண்டும். இதை தான் மத்திய அரசு சொல்கிறது. இந்திய மக்கள் மீது எப்படி கை வைத்தாலும், உன் சொந்த வீடு தேடி வந்து சாவு கதவை தட்டும் அதை மோடி செய்து வருகிறார். கோவை, ஈரோடு, சேலத்தில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் இருக்கும் இடமாக உள்ளது. கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு நமக்கு ஒன்று தெரிகிறது. மீதமுள்ளவை நேர்மையான காவல்துறை அதிகாரி தடுத்து நிறுத்துகிறார். 20 ஆண்டுகளுக்கு பின்னோக்கி எடுத்து சென்றது குண்டு வெடிப்பு சம்பவம். வருகின்ற தேர்தலில் பாஜக உறுப்பினரை வெற்றி பெற செய்ய வேண்டும். திமுகவிற்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பில்லை என சொல்ல முடியாது. திமுகவில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதி இல்லத்தில் காவல்துறை சோதனை நடைபெற்றுள்ளது.
எஸ்.டி.பி.ஐ கட்சியினருடன் கூட்டணி வைக்கிறார்கள். அவர்கள் யார்? அவர்களுக்கும் பாப்புலர் பிரண்ட் அமைப்பிற்கும் என்ன தொடர்பு?இந்தியாவின் மீது உலக நாடுகளின் கண்கள் உள்ளது. உலகில் எந்த நாடுகளுக்கும் வல்லரசு என்ற வார்த்தை பொருந்தாது. உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு பிரச்சனை உள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்கு மோடி அரசு நமக்கு தேவை. வலிமையான நாட்டை உருவாக்க பாஜக வேண்டும். எங்கே வேண்டுமானலும் குண்டு வெடிக்கும். அதை மாற்ற பாஜக ஆட்சிக்கு வர வேண்டும்” எனத் தெரிவித்தார்.