கனமழையினால் குளக்கரை உடைப்பு - 8 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியது
விவசாயிகள் உடனடியாக பொதுப்பணி அதிகாரிக்கு தகவலளித்ததுடன் அதிகாரிகள் வருவார்கள் என விவசாயிகள் காத்திருந்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததுடன் இது தொடர்பாக எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.;
தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 4 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் கோவை செம்மேடு பகுதியிலுள்ள உக்குளத்த்தின் கரையில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் விவசாய நிலங்களில் புகுந்ததால் சுமார் 8 ஏக்கரில் பயிரிடபட்டுள்ள சின்ன வெங்காயம் மற்றும் கரும்பு நீரில் மூழ்கியது. தொடர் மழை காரணமாக இன்று காலை உக்குளத்தின் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த விவசாயிகள் உடனடியாக பொதுப்பணி அதிகாரிக்கு தகவலளித்ததுடன் அதிகாரிகள் வருவார்கள் என விவசாயிகள் காத்திருந்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததுடன் இது தொடர்பாக எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் தங்களது சொந்த செலவில் ஜேசிபி இயந்திரத்தினை கொண்டு குளத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பை அடைத்து சரி செய்தனர்.
தொடர் மழை காரணமாக குளம் நிரம்பி காலையில் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவலளித்தும் மாலை வரை அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்படுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினார். மேலும் தாமதித்தால் நீர் முழுவதும் விவசாய நிலங்களுக்குள் சென்றுவிடாமல் இருக்க நாங்களே ஜேசிபி இயந்திரத்தை கொண்டு உடைப்பை சரி செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். 4 ஏக்கரில் சின்ன வெங்காயம், 4 ஏக்கரில் கரும்பு என மொத்தம் 8 ஏக்கரில் விவசாயம் செய்து வருவதாகவும், விதைத்து 15 நாட்களே ஆன சின்ன வெங்காயம் முழுவதுமாக நீரில் மூழ்கி அழுகியுள்ளதாகவும், 6 மாத பருவத்தில் இருக்கும் கரும்பு முழுவதும் நீரில் மூழ்கியுள்ளதாக வேதனை தெரிவித்தனர். தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக உரிய இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.