கோவை மதுக்கரை அருகே நகை பெட்டி தயாரிக்கும் ஆலையில் பயங்கர தீ விபத்து

கோவை மதுக்கரை அருகே நகைபெட்டி தயாரிக்கும் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2024-02-09 11:11 GMT

நகைபெட்டி தயாரிக்கும் ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது.

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே அறிவொளி நகர் பகுதி உள்ளது. இப்பகுதியில் ரசீது என்பவருக்கு சொந்தமான நகை பெட்டி தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பிற்பகலில் தொழிலாளர்கள் உணவு அருந்த வெளியே சென்ற போது, நகை பெட்டி தயாரிக்கும் ஆலையின் குடோனில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனை அறிந்த தொழிலாளர்கள் தீயினை அணைக்க முயன்ற போது தீ மளமளவென பரவியுள்ளது.

இதனால் தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர். பின்னர் தீ மளமளவென பரவி ஆலை முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. இதனையடுத்து குடோன் மற்றும் ஆலையில் பணியில் இருந்த தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். குடோனில் ஏற்பட்ட தீ காரணமாக கரும்புகை வெளியேறி வருகின்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது.

தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு 4 வாகனங்களில் விரைத்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்து குறித்து மதுக்கரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீயை அணைத்த பின்பே தீ பற்றியதற்கான காரணங்களும் சேதமடைந்த பொருட்களின் மதிப்பும் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Tags:    

Similar News