17 வயது சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர் கைது
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர் கைது.;
சூலூர் அருகே தனியார் மில் ஒன்றில் படித்துக் கொண்டே வேலை பார்த்து வந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற இளைஞரை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தில் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள தனியார் மில் ஒன்றில் படித்துக்கொண்டே வேலை செய்து வந்துள்ளார். ஏற்கனவே சிறுமிக்கு சொந்த ஊரில் உதயகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பெற்றோர் பலமுறை கண்டித்தும் கேட்காததால், சிறுமியை கோவையில் உள்ள தனியார் மில் ஒன்றில் படித்துக்கொண்டு வேலை செய்ய வைத்தனர்.
இந்த நிலையில் சிறுமியிடம் செல்போனில் பேசிய உதயகுமார், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நாமக்கல்லுக்கு சிறுமியை கடத்திச் சென்றுள்ளான். இருவரும் அங்கு தனி வீடு எடுத்து ஒரு மாதம் தங்கியுள்ளனர். இதையடுத்து தங்களது மகளை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன், நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நாமக்கல்லில் இருந்த உதயகுமார் மற்றும் சிறுமியை சூலூர் காவல் நிலையம் அழைத்து வந்தனர். சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற உதயகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுமிக்கு அறிவுரை கூறிய போலீசார், பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.