சூலூர் அருகே சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
சூலூர் அருகே தொடர் மழையால் பலவீனமான வீட்டின் ஒரு பக்க மண் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
கோவை மாவட்டம் சூலூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சூலூரை அடுத்த காங்கேயம் பாளையம் ஏடி காலனியில் நேற்றிரவு பெய்த மழையின் காரணமாக, வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் 48 வயதான கூலி தொழிலாளி சங்கர் கணேஷ் என்பவர் உயிரிழந்தார்.
சங்கர் கணேஷ், தனது மனைவி ஜோதி மணியுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்துள்ளார்.இந்த நிலையில் வீட்டில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த போது தொடர் மழையால் பலவீனமான வீட்டின் ஒரு பக்க மண் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.இதில், சங்கர் கணேஷ் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சத்தம் கேட்டு எழுந்த ஜோதி மணி, இடிபாடுகளில் சிக்கியிருந்த கணவரை மீட்க முயன்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன், சங்கர் கணேஷை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், சங்கர் கணேஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்ட நிலையில், உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
சூலூர் காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீடு பழமையானது மற்றும் மோசமான நிலையில் இருந்ததால், மண் சுவர் இடிந்து விழுந்திருக்கலாம் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். இந்த துயரச் சம்பவம் சூலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.