வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் : கேரள அமைச்சர்..!
வயநாடு நிவாரண நிதியாக 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கல்லூரி நிர்வாகத்தினர் அமைச்சர் ஜி.ஆர். அனிலிடம் வழங்கினர்.
கோவை மாவட்டம் சூலூரில் உள்ள ஆர்.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உணவு மற்றும் பொது விநியோக அமைப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கேரள மாநில உணவுத்துறை அமைச்சர் ஜி.ஆர்.அனில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.
அப்போது இயற்கை விவசாயம் மற்றும் மரபணு உணவுகளை மீண்டும் பழக்கப்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும், கேரள மாநில அரசு சார்பில் உணவுத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் மாணவர்களிடையே விளக்கிப் பேசினார். தொடர்ந்து ஆர்.வி.எஸ் கல்வி குழுமம் சார்பில் மாணவர்களிடமிருந்து வயநாடு பேரிடர் நிவாரண நிதியாக திரட்டப்பட்ட 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கல்லூரி நிர்வாகத்தினர் அமைச்சர் ஜி.ஆர். அனிலிடம் வழங்கினர்.
முன்னதாக அமைச்சர் ஜி.ஆர்.அனில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநில எல்லையோரம் உள்ள தமிழக கல்லூரிகள் கேரள மாணவ மாணவிகளுக்கு பெருமளவில் பயன்படுத்து வருகிறது. கல்வியை பொருத்தவரை கேரள மாநிலம் உயர்ந்த இடத்தில் உள்ளது. வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை தொடர்ந்து பிரதமரின் வருகையை கேரள மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
வயநாடு பகுதிகளில் சரிவு சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் அரசு இயந்திரம் முழுவீச்சில் செயல்பட்டது. மாநில அமைச்சர்கள் 4 பேர் அங்கேயே முகாமிட்டு மீட்புப் பணிகளை கவனித்து வந்தார்கள். உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். கூடுதல் அதிகாரிகளை நியமித்து நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறோம்.
ராணுவம், போலீசார், தீயணைப்புத் துறையினர், பேரிடர் மீட்பு குழுவினர் மட்டுமல்லாது பல்வேறு கட்சிகளின் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மீட்பு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளுடன் புதிய கட்டுமானங்களை ஏற்படுத்தி மக்களை மீள்குடியமர்த்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம்.
இதற்காக மத்திய அரசிடம் 2000 கோடி ரூபாய் நிதி கேட்டுள்ளோம். இந்த அசாதாரண சூழலை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்து தேவையான உதவிகளை செய்ய வேண்டும். இந்தக் கோர சம்பவத்தில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மத்திய அரசு இதனை தேசிய பேரிடராக அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம். தமிழ்நாடு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மக்கள் மீது அன்பு கொண்டவர்கள் பலர் தங்களால் இயன்ற நிதியினை கொடுத்து வருகின்றனர் என தெரிவித்தார்.
வயநாடு நிலச்சரிவை காரணம் காட்டி முல்லை பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்று வலைதளங்களில் கோரிக்கை வலுத்துள்ளது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அது குறித்து இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் மற்றும் மலையாள மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் சிலர் மலிவான தந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர். தமிழக - கேரள மக்கள் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். தமிழர்களை சகோதர கண்ணோட்டத்துடன்தான் கேரளா அணுகுகிறது என்றார்.