சூலூரில் கனமழை ; வெள்ளநீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல்
மழை, கனமழையாக உருவெடுத்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்தது.;
கோவை புறநகர் பகுதிகளில் காலை முதலே வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் மாலை வேளையில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. மாலை நேரத்தில் சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்ய தொடங்கிய மழை, கனமழையாக உருவெடுத்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் தாழ்வான பகுதிகளில் குளம் போல தேங்கியது.
திருச்சி சாலையில் சூலூர் காவல் நிலையம் அருகே சாக்கடை நீருடன் மழை நீரும் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். ஆடிப்பட்டத்தில் நடவு செய்த விவசாயிகள் கடந்த ஒரு மாத காலமாக மழை பெய்யும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது பெய்துள்ள மழை காரணமாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேவேளை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கோவை புறநகரப் பகுதிகளில் வெப்பம் சுட்டெரித்து வந்த நிலையில், மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.