திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதல்ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை
திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதல் ஜோடி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கோவையில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.;
கோவை அடுத்து மருதமலை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீவித்யா (30). துடியலூர் அடுத்த தொப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (30). ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
கல்லூரி படிப்பு முடிந்த பிறகு இருவரும் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், வேலை ராஜினாமா செய்துவிட்டு, கடந்த எட்டு வருடங்களாக ஆன் லைன் டிரேடிங் தொழில் செய்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரிய வர, இரு வீட்டாரும் பேச்சு வார்த்தை நடத்தி, அடுத்த மாதம் திருமணம் செய்து வைக்க, தேதியை நிச்சயம் செய்து வைத்திருந்தனர்.
இதற்கிடையே, கடந்த 17ம் தேதி வீட்டில் இருந்து வெளியேறிய ஸ்ரீவித்யா, வீடு திரும்பவில்லை. இதையடுத்து, வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை பெங்களூர் - எர்ணாகுளம் ரயில் முன் பாய்ந்து ஸ்ரீவித்யா மற்றும் பிரவீன்குமார் இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர்.
காவல் ஆய்வாளர் வடிவுகரசி தலைமையிலான ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், ஆன்-லைன் டிரேடிங் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், நீண்ட காலம் காதலித்து வந்து, அடுத்த மாதம் திருமணம் செய்ய இருந்தவர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.