முதலாளிகளை தொழிலாளிகள் ஆக்கியது பாஜக அரசு : கமல்ஹாசன் குற்றச்சாட்டு

Coimbatore News- முதலாளிகளை தொழிலாளிகள் ஆக்கியது பாஜக அரசு என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டினார்.

Update: 2024-04-16 16:15 GMT

Coimbatore News- வேட்பாளரை ஆதரித்து, கோவையில் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகர் கமல்ஹாசன்.

Coimbatore News, Coimbatore News Today- கோவை சூலூர் பகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கணபதி ராஜ்குமார் கவுன்சிலர் ஆகவும், மேயராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். 80 ஆண்டுகளுக்கு முன்னால் என் தந்தை எந்த காரணத்திற்காக காந்தியின் பின்னாலும், காமராஜர் பின்னாலும் சென்றாரோ, அதே காரணங்களுக்காக நானும் புறப்பட்டிருக்கிறேன் என்பதில் பெருமகிழ்ச்சி. சிறைப்பட்டு செக்கிழுத்து வாழ்விழந்து மீட்டுத் தந்த சுதந்திரம், வெள்ளையரை வெளியேற்றிய அந்த தியாகம் இன்று இந்த கொள்ளையர்கள் கையில் நாட்டை கொடுக்கவா?

வாய்ஜாலம் பேசுபவர்கள் பேச்சில் மயங்கி விடாதீர்கள். அது செயல் ஆகாது. ஒன்றிய பாஜக அரசு மீது என்ன கோபம் என்று என்னை கேட்கிறார்கள்? எனக்கு யார் மீதும் கோபம் கிடையாது. நாம் நன்றாக இருக்க வேண்டும், அதற்கு வழி செய்கின்ற அனைவருக்கும் வணக்கம் சொல்வோம், வந்தனம் சொல்வோம். அதற்கு மாறாக செய்பவர்கள் நமக்கு விரோதிகள் கூட அல்ல, வேண்டாதவர்கள். அனைவருக்கும் சமமான வாய்ப்பு அவரவர் உரிமை அவரவர்க்கு அவரவர் மதம், கடவுள், உணவு, உடை, சமமான நீதி வழங்குவது தான் ஜனநாயகம். புத்தர் சொன்ன தம்மபதம் என்ற நேர்வழி என்பதும் அதுதான். உலகின் மிகப்பெரிய தேர்தல் இது. 97 கோடி பேர் வாக்களிக்க போகிறார்கள். இது இரண்டாவது சுதந்திரப் போர் என்று கூறினால் மிகையாகாது. 

பத்து வருடத்திற்கு முன்பு இருந்த சூலூர் இது அல்ல. தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்பொழுது இங்கு வந்து விமான நிலையம் கொண்டு வருகிறேன், ரயில் விடுகிறேன் என்றெல்லாம் ரீல் விடுவது தேர்தலுக்கு தானே? 10 வருடம் இருக்கும் பொழுது இதை செய்திருக்க வேண்டாமா? 70 வருடம் நாடு முன்னேறி இருக்கிறது என்று கூறுகிறார்கள். தமிழ்நாட்டை எடுத்தால் கட்சி பாரபட்சம் பாராமல் படிப்படியாக பல தலைவர்கள் நம்மை முன்னுக்கு கொண்டு சென்ற திராவிட மாடல் இது. திராவிடர்கள் இயற்றிய மாடல் இது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பள்ளிகள் கல்லூரிகள் மருத்துவமனைகள் தொழிற்சாலைகள் போக்குவரத்து இதற்கு நிகராக இந்தியாவில் எங்கு தேடிப் பார்த்தாலும் கிடைப்பது கடினம். பாஜக மாடல் vs திராவிட மாடல் அப்படித்தானே மல்யுத்தம் செய்து விளையாட பார்க்கிறீர்கள். இது விளையாட்டல்ல உங்கள் வாழ்க்கையுடன் விளையாடி விடுவார்கள்.

21 பணக்காரர்கள் 70 கோடி மக்களின் சொத்தை குவித்திருக்கும் மாடல் பாஜக மாடல். ஏழையின் சிரிப்பில் இறைவனை பார்க்கும் இந்த மாடல்தான் நல்ல மாடல். இந்தியா பின்பற்ற வேண்டிய மாடல் இதுதான். உள்ளூர் பணக்காரனை உலக பணக்காரனாக்குவது சாதனை அல்ல, கடைநிலை ஏழையை கரையேற்றுவதுதான் சாதனை. பல முதலாளிகளை தொழிலாளிகள் ஆக்கியது பாஜக அரசு.

அமெரிக்கா ஜப்பான் மீது இரண்டு அணுகுண்டுகளை போட்டார்கள், அதேபோல் இங்கும் பண மதிப்பிழப்பு ஜிஎஸ்டி என்ற இரண்டை போட்டார்கள். அதில் நல்ல முதலாளியாக இருந்தவர்கள் எல்லாம் தொழிலாளியாக தொழிலுக்கு வந்து விட்டார்கள். ஏதோ நகைக்கடையில் செய்த செங்கோலை கையில் பிடித்து கொண்டிருப்பது செங்கோல் அல்ல, உங்கள் ஒவ்வொருவர் கையிலும் இருக்கின்ற இந்த விரல் தான் செங்கோல். நீங்கள் வைக்கும் புள்ளிதான் பெரிய புள்ளி யார்? சின்ன புள்ளி யார்? என்பதை முடிவு செய்யும். இது உங்கள் வாழ்க்கைக்கான போர். ஜூன் நான்காம் தேதி விடுதலை கிடைக்க வேண்டும் என்றால், இன்று அதற்கு சிந்தித்து செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News