யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து முதலீட்டாளர்கள் போராட்டம்
தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம்.
கோவையை தலைமையிடமாக கொண்டு Myv3 Ads என்ற செயலியை சக்தி ஆனந்தன் என்பவர் நடத்தி வருகிறார். மேலும் யூ டியூப் சமூக வலைதளத்தில் இந்த செயலியின் சேனலும் இயங்கி வருகிறது. இதில் தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் செலுத்தும் பணத்திற்கு ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள் வழங்கப்படும் எனவும், புதிய நபர்களை சேர்க்கும் நபர்களுக்கு தனியாக பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் இலட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர்.
இந்நிலையில் மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது சட்டத்திற்கு புறம்பானது எனவும், தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வரும் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறை உதவி ஆய்வாளர் முத்து புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அந்நிறுவனத்தின் மீது சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த நிறுவனத்திற்கு ஆதரவாகவும், பொய் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க முதலீட்டாளர்கள் வர உள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தால், போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால் நீலாம்பூர் பகுதியில் உள்ள புறவழிச்சாலையில் கூடுமாறு அந்நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தன் வேண்டுகோள் விடுத்தார். இதன் பேரில் கோவை மாவட்டம் நீலாம்பூர் அருகே உள்ள புறவழிச்சாலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் குவிந்தனர். அப்போது அந்த நிறுவனம் எந்த மோசடியும் செய்யவில்லை எனவும், தவறான புகார் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் மற்றும் கோட்டாச்சியர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாச்சியர் உறுதியளித்தை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.